புதிய எலைட்புக், புரோபுக், ஆம்னிபுக் மாடல்களை அறிமுகப்படுத்திய ஹெச்பி!
காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: மெஹபூபா முஃப்தி
காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல, பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது என்று மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவத்திற்கு உலக நாடுகளும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜம்மு - காஷ்மீரில் இன்று கண்டனப் பேரணி நடைபெற்றது. இதற்கு கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது எங்கள் மீதான தாக்குதல், நாங்கள் அதைக் கண்டிக்கிறோம். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாது. உள்துறை அமைச்சர் இங்கே இருக்கிறார். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை கண்டறிந்து விரைவில் தண்டனை வழங்க வேண்டும்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகளை மீட்டதுடன், மருத்துவமனையில் அவர்களுக்கு தங்கள் ரத்தத்தை கொடுத்து காப்பாற்றியது காஷ்மீர் முஸ்லிம்கள்தான். அதன்பிறகுதான் சம்பவ இடத்துக்கு ராணுவமும், பாதுகாப்புப்படைகளும், அரசும் உதவ வந்தன.
காயமடைந்தவர்களை மைல்கணக்கில் நடந்துசென்று காப்பாற்றிய சஜ்ஜாத் பற்றியோ, டாக்சி ஓட்டுநர் பற்றியோ, காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த ஆதில் ஷா பற்றியோ பலரும் பேசவில்லை. காப்பாற்றியவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான். இவர்கள் அனைவரும் காஷ்மீரிகள்.
நாங்கள் (காஷ்மீரிகள்) பயங்கரவாதிகள் அல்ல, பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது. நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் கொடூரமாகத் தாக்கப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. அதற்காக ஒவ்வொரு ஹிந்துவும் தாக்குதல் நடத்துவதாக சொல்லமுடியாது என்றார்.