பஹல்காம் தாக்குதல் ஹிந்து - முஸ்லீம் பிரச்னை அல்ல! - காஜல் அகர்வால்
20 ஆண்டுகளாக கோமா நிலையிலுள்ள சௌதி இளவரசர்! என்ன காரணம்?
சௌதி அரேபியா நாட்டின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஒருவர் சுமார் 20 ஆண்டுகளாக கோமா நிலையிலுள்ளார்.
சௌதி அரேபியாவை ஆளும் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் அல்-வாலீத் பின் காலெத் பின் தலால், தூங்கும் இளவரசர் (ஸ்லீபிங் பிரின்ஸ்) என வர்ணிக்கப்படும் இவர் அந்நாட்டை நிறுவிய முன்னாள் அரசர் அப்துல் அஜீஸின், கொள்ளுப்பேரன் ஆவார்.
இவர் கடந்த 2005-ம் ஆண்டு ராணுவக் கல்லூரியில் பயின்று வந்தபோது நிகழ்ந்த வாகன விபத்தினால், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, கோமா நிலைக்குச் சென்ற அவரை அந்நாட்டு தலைநகர் ரியாத்திலுள்ள கிங் அப்துல் அஜீஸ் மருத்துவ நகரத்திலுள்ள மருத்துவ உபகரணங்கள் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக உயிருடன் வைத்துள்ளனர்.
இளவரசர் அல்-வாலீதை பரிசோதனைச் செய்த மருத்துவர்கள் அனைவரும், அந்த உபகரணங்களின் செயல்பாடுகளை நிறுத்தி அவரை மரணமடைய செய்ய பரிந்துரைத்தபோதும், அவரது தந்தையான இளவரசர் காலெத் பின் தலால் அல் சௌத் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
‘தனது மகன் மரணிக்க வேண்டுமென கடவுள் நினைத்திருந்தால், அவர் விபத்திலேயே இறந்திருப்பார்’ எனக் கூறும் அவர் ஒரு நாள் நிச்சயம் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் அவரை கவனித்து வருகிறார்.
முன்னதாக, கடந்த ஏப்.18 ஆம் தேதி அன்று இளவரசர் அல்-வாலீத் தனது 36 வது பிறந்த நாளை கோமா நிலையிலேயே அடைந்துள்ளார். அதன் பின்னர், அவரது நிலைக்குறித்தும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2019-ல் இளவரசர் அல்-வாலீத்தின் உடலில் சிறியளவிலான அசைவுகள் உண்டானது எனக் கூறப்பட்டது. அவர் தனது கை விரலை உயர்த்தினார் என்றும் தலையை அசைத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டாலும் அவர் முழுவதுமாக குணமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:அட்டாரி - வாகா எல்லை மூடல்: இரு நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் உறவுகள்!