Arjun Tendulkar: ``இதைச் செய்தால் அடுத்த கெயில் அர்ஜுன் டெண்டுல்கர்தான்'' - யுவராஜ் தந்தை சவால்
இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகனாக இருந்தாலும், கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக தனக்கென தனி இடம்பிடிக்கப் போராடிவருகிறார் அர்ஜுன் டெண்டுல்கர்.
ஐ.பி.எல்லில் 2023-ல் முதல்முறையாக மும்பை அணியில் களமிறங்கிய அர்ஜுன் டெண்டுல்கர், அந்த சீசனில் 4 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பேட்டிங்கில் 13 ரன்கள் மட்டுமே அடித்தார். 2024 ஐ.பி.எல் சீசனில் ஒரேயொரு போட்டியில் களமிறங்கிய இவர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு இறுதியில் மெகா ஏலத்துக்கு முன்பாக மும்பை அணியிலிருந்து கழற்றவிடப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் மும்பை அணி உள்பட எந்த அணியும் முதலில் வாங்க முன்வரவில்லை. இரண்டாவது முறையாகப் பெயர் வாசித்தபோது, அடிப்படை விலை ரூ.30 லட்சத்துக்கு மும்பை அணி வாங்கியது. இருப்பினும், இந்த சீசனில் இதுவரையில் ஒரு போட்டியில் கூட அர்ஜுன் டெண்டுல்கர் களமிறக்கப்படவில்லை.
அதேசமயம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங்கிடம் பயிற்சிபெற்ற அர்ஜுன் டெண்டுல்கர், ரஞ்சி டிராபியில் கோவா அணிக்காகக் களமிறங்கி இதுவரையில் மொத்தமாக 17 போட்டிகளில் 37 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு, ஒரு சதம் உட்பட 532 ரன்களைக் குவித்திருக்கிறார். இந்த நிலையில், தனது மகன் யுவராஜிடம் 3 மாதங்கள் அர்ஜுன் டெண்டுல்கர் பயிற்சி பெற்றால் அடுத்த கிறிஸ் கெயிலாக அவர் உருவெடுப்பார் என்று யோகராஜ் சிங் கூறியிருக்கிறார்.

cricketnext-டிடம் பேசிய யோகராஜ் சிங், "அர்ஜுன் டெண்டுல்கரைப் பொறுத்தவரை, அவர் பந்துவீச்சில் குறைவாகவும், பேட்டிங்கில் அதிகமாகவும் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கூறினேன். நான் சவால் விடுகிறேன், 3 மாதங்கள் யுவராஜிடம் அர்ஜுன் பயிற்சி பெற்றால் அடுத்த கிறிஸ் கெயிலாக அவர் உருவெடுப்பார். ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், அதன் பிறகு திறம்பட பந்துவீச முடியாது. எனவே, அர்ஜுனை யுவராஜிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
