பஹல்காம் தாக்குதல் ஹிந்து - முஸ்லீம் பிரச்னை அல்ல! - காஜல் அகர்வால்
ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம்! - பிசிசிஐ
ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
2008 ஆம் ஆண்டு மும்பையில் ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு இந்திய அணி, பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டது. மேலும், சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணி விளையாட மறுத்ததால், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபையில் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இனி எந்த இருதரப்பு கிரிக்கெட் தொடர்களிலும் பாகிஸ்தானுடன் மோதப் போவதில்லை என்று பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
மேலும், சமீபத்தில் ஐசிசிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருதரப்பு போட்டிகளில் விளையாடாவிட்டாலும், இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் ஒரே குழுவில்தான் விளையாடுகின்றன. இந்தப் போட்டிகளுக்கு ரசிகர்களிடம் அதிக ஆதரவும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இனி நடக்கவிருக்கும் ஐசிசி தொடர்களில் இரு அணிகளையும் ஒரே குழுவில் இணைக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி தரப்பில் எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக, ஐசிசி தலைமையேற்று நடத்திய கூட்டத்தில் இனி நடைபெறும் அனைத்து இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளும் ஹைபிரிட் மாடலில் வெளிநாடுகளில் மட்டுமே நடத்தப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இன்னும் ஓரிரு மாதங்களில் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. அதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதும் குரூப் சுற்றுப் போட்டி இடம் பெற உள்ளது. அதை மாற்றி அமைக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடைசியாக பாகிஸ்தான் தலைமையேற்று நடத்திய ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்ததால் இலங்கையில் நடைத்தப்பட்டது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப் போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையையும் கைப்பற்றியது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடுத்த ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையில் மோதவிருக்கின்றன. பொதுவாக இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கான விளம்பர வருவாயை வைத்துதான் ஐசிசி தொடர்கள் திட்டமிடப்படுகின்றன. அதை வைத்துதான் ஒளிபரப்பு உரிமம் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்படுவது கவனிக்கத்தக்கது.
இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுவார்: ரவி சாஸ்திரி