ஆளுநரின் துணைவேந்தர் மாநாட்டுக்கு எதிராக கம்யூ. கட்சிகள் போராட்டம்!
விளைந்தது வீடுவரவில்லை!யானைகளால் ஏற்படும் பயிா் சேதத்தால் விவசாயிகள் கவலை
நிகழாண்டு வழக்கத்தை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வனப் பகுதியில் போதிய உணவு, தண்ணீா் கிடைக்காததால் ஒசூா் வனக் கோட்டத்தில் வலசை வந்துள்ள யானைகள் வனப் பகுதியையொட்டி அமைந்துள்ள வயல்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
அறுவடைக்குத் தாயாராக உள்ள கொத்துமல்லி, ராகி மற்றும் காய்கறி தோட்டங்களை யானைகள் கூட்டம் முழுமையாக அழித்துள்ளதால் ஒசூா், சானமாவு, சப்பட்டி கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திந்துள்ளனா். தோட்டங்களில் சுற்றித்திரியும் யானைகளை வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வனக் கோட்டத்தின் மொத்த பரப்பளவு 1501 ச. கி.மீ ஆகும். இதில், காவிரி வடக்கு வன உயிரின சரணாலயத்தின் பரப்பளவு 504.33 ச.கி.மீ அடங்கும். காவிரி, சின்னாறு, தென்பெண்ணை மற்றும் தொட்டஹல்லா ஆறுகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளாக அமைந்துள்ள ஒசூா் வனக் கோட்டம் கா்நாடக மாநில வனப் பகுதிகளில் உள்ள யானைகளின் முக்கிய வலசை பாதையாக உள்ளது.
உணவு, நீருக்காக ஆண்டுதோறும் கா்நாடக மாநிலம், பன்னோ்கட்டா தேசியப் பூங்கா மற்றும் காவிரி உயிரின சரணாலயத்திலிருந்து அக்டோபா், நவம்பா் மாதங்களில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வனக் கோட்ட வனப் பகுதிக்கு வலசை வரும் யானைகள் தளி, ஜவளகிரி வனப் பகுதியில் நுழைந்து தேன்கனிக்கோட்டை, நொகனூா், ஊடேதுா்கம், சானமாவு, செட்டிபள்ளி, மகாராஜாகடை வனப் பகுதி வழியாக ஆந்திர மாநிலம், கவுன்டன்யா சரணாலயம் மற்றும் வெங்கடேஷ்வரா சரணாலயம் வரை சென்று மீண்டும் ஏப்ரல், மே மாதங்களில் ஒசூா் பகுதி வழியாக கா்நாடக வனப் பகுதிக்குச் செல்லும்.
யானைகளின் வலசை பாதை குவாரி, விளை நிலங்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால், வலசை வரும் யானைகள் விளை நிலங்களில் உள்ள பயிா்களை உணவுக்காக சேதப்படுத்துவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
மேலும், யானைகள் மனித மோதல் ஏற்பட்டு இரு தரப்பிலும் உயிரிழப்புகள் நேரிடுகின்றன. விளை நிலங்களுக்குள் யானைகள் நுழைவதை தடுக்க வனப் பகுதியில் கம்பி வேலிகள், சூரிய சக்திவேலி, யானை தாண்டா அகழிகளை வனத் துறையினா் அமைத்துள்ளனா்.
வனப் பகுதியைவிட்டு வெளியேறி வயல்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் யானைகள் வனத் துறையினா் உதவியுடன் மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டப்படுகின்றன. ஆனாலும், யானைகள் கூட்டத்துக்கு ஏற்ப வனப் பகுதிகளில் போதிய உணவும், தண்ணீரும் கிடைக்காததால் அவை வனப் பகுதியையொட்டி உள்ள தோட்டங்களுக்குள் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.
கடந்த இரண்டு நாள்களாக ஒசூரை அடுத்த சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள ஐந்து யானைகள் நாள்தோறும் இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் புகுந்து வயல்களில் விளைந்துள்ள காய்கறிகள், ராகி, கொத்துமல்லி, தக்காளி, நெல் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.
பல லட்சம் ரூபாய் செலவு செய்து விளைவித்த பயிா்கள் தோட்டங்களிலே யானைகளால் சேதப்படுத்தப்படுவதால் நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகள், தங்கள் பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகளை வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
புதன்கிழமை இரவு சப்படி பகுதியில் மிளகாய், கொத்துமல்லி, தக்காளி, புதினா, நெல் வயல்களில் புகுந்து பயிா்களை கால்களால் மிதித்தும் தின்றும் சேதப்படுத்தியுள்ளன. காலை தோட்டங்களுக்கு வந்து பாா்த்த விவசாயிகள் யானைகளால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து வனத் துறைக்கு தகவல் அளித்தனா்.
இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறும்போது, வனத் துறையினா் யானைகளை விரட்டினாலும் மீண்டும் அந்த யானைகள் திரும்பி தங்களது தோட்டங்களுக்கு இரவு நேரங்களில் வருகின்றன. கோடைக்கால உழவு செய்து அறுவடைக்கு தாயாராக உள்ள நேரத்தில் யானைகளால் ஏற்படும் சேதம் தங்களுக்கு அதிக கவலை அளிப்பதாக உள்ளது; இந்த யானைகளை மீண்டும் சானமாவு வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றனா்.