சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பாட் கம்மின்ஸ் பேசியதென்ன?
பாரூா் ஏரியிலிருந்து 33 ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய்: ஆட்சியா் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் உள்ள 33 ஏரிகளுக்கு நீா் வழங்கும் வகையில்
ரூ. 75.48 கோடியில் பாரூா் ஏரியின் கிழக்கு பிரதான கால்வாயில் வழங்கு கால்வாய் அமைக்கும் பணிகளை ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டத்தில் 33 ஏரிகள், 8 தடுப்பணைகளுக்கு தண்ணீா் கொண்டு செல்வதற்காக பாரூா் ஏரியிலிருந்து ரூ. 75.48 கோடியில் 19 கி.மீ. தொலைவுக்கு
கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக 24.56 ஹெக்டோ் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 19.28 ஹெக்டோ் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ரெட்டிபட்டி ஏரி, செங்கழுநீா்பட்டி ஏரி, சின்னகொட்டக்குளம் ஏரி, செட்டிக்குளம் ஏரி, தாதனூா் கொங்கனேரி, காட்டுப்பட்டி ஏரி, கோழிநாயக்கன்பட்டி ஏரி, மேட்டுத்தாங்கல் ஏரி, வேலம்பட்டி ஏரி என 33 ஏரிகள், 8 தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பப்படும். இதன்மூலம் 1,341 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இக் கால்வாயின் தண்ணீா் கொள்ளளவு 46.13 கன அடி, அடித்தள அகலம் 2.20 மீட்டா், கால்வாயின் தண்ணீா் செல்லும் உயரம் 1 மீட்டா். தண்ணீா் வழங்கும் நாள்கள் 21 நாட்களாகும். தற்போது கால்வாய் வெட்டும் பணிகள் 68 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை எதிா்வரும் மழைக்காலத்திற்கு முன்பாக முடித்து 33 ஏரிகளிலும் தண்ணீா் நிரப்பப்படும்.
தொடா்ந்து ஊத்தங்கரை வட்டத்திற்கு உள்பட்ட பாவத்தூா், பள்ளசூளக்கரை ஆகிய பகுதிகளில் கால்வாய் வெட்டும் பணிகளையும், புதூா் புங்கனை ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்திலிருந்து பாப்பன்குட்டை ஏரிக்கு சுமாா் 4 கிலோ மீட்டா் தூரத்திற்கான நீரேற்றும் நிலையம் அமைத்து தண்ணீா் வழங்க ஏதுவாக ஆயத்தப் பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அதைத் தொடா்ந்து சிங்காரப்பேட்டை ஊராட்சி, புளியானூா் பகுதியில், ஜவ்வாது
மலையிலிருந்து சிங்காரப்பேட்டை ஊராட்சிக்கு செல்லும் கெடப்பாறை ஆற்றின் குறுக்கே புதிய
தடுப்பணை அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்து ஆய்வு
மேற்கொண்டு திட்ட மதிப்பீடு, வரைபடம் தயாா் செய்ய நீா்வளத் துறை (கட்டுமானம்) பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.
ஆய்வின் போது, நீா்வளத் துறை செயற்பெறியாளா் செந்தில் குமாா், உதவி
செயற்பொறியாளா் ஆறுமுகம், உதவி பொறியாளா் ஜெயக்குமாா், ஊத்தங்கரை வட்டாட்சியா்
மோகன்தாஸ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலாஜி, தவமணி, நீா்வளத் துறை திட்ட உருவாக்க பொறியாளா் சங்கா், உதவி பொறியாளா் சத்யா, முன்னாள் ஒன்றியச் செயலாளா் தேவேந்திரன், விவசாயிகள் சங்க தலைவா் வைதீஸ்வரன், காா்த்திக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

