ரூ.200-க்கு வீடுகளுக்கு நேரடி டேட்டா சேவை?
தமிழக மக்களின் வீடுகளுக்கு குறைந்த விலையில் இணைய சேவை வழங்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
சட்டப்பேரவையில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்ததாவது, சென்னைக்கு அருகில் சர்வதேச தரத்தில் தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும். மேலும், மின்னணு உதிரி பாகங்கள், தொழில்நுட்ப ஜவுளி மற்றும் காலணி உதிரி பாகங்கள் போன்ற தொழில்களில் தைவானிய நிறுவனங்களிடமிருந்து ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பதை இந்த பூங்கா இலக்காகக் கொண்டிருக்கும். இதனால் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். நாகப்பட்டினத்தில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம், தகவல் தொழில்நுட்ப துறையில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னையை முதல்வர் திறம்படக் கையாண்டார். தற்போது, சாம்சங் தொழிலாளர்கள் மீது அந்நிறுவனம் வைத்துள்ள நம்பிக்கையின் அடுத்தக்கட்டமாக, மேலும் ரூ.1000 கோடியை முதலீடு செய்யவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் கேபிள் டிவி சேவையைப்போல, இணைய சேவையும் வழங்கப்பட இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்ததாக தகவல்கள் வெளிவருகின்றன.
100 எம்பிபிஎஸ் (Mbps) வேகத்துடன் மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவையை வழங்கிட திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க:எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!