பெங்களூரு வியாபாரி கடத்தப்பட்டதாகப் புகாா்
பெங்களூரைச் சோ்ந்த கண்ணாடி வியாபாரியை 4 போ் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றதாக வியாழக்கிழமை, காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
கா்நாடகா மாநிலம், பெங்களூரு, ஓசூா் சாலை, மடுவாலா பகுதியைச் சோ்ந்தவா் திலீப் (32). இவரது உறவினா் அதே பகுதியைச் சோ்ந்த கலூவா (28). இவா்கள் ஆண்டிபட்டியில் தங்கியிருந்து கண்ணாடி வியாபாரம் செய்து வந்தனா்.
இந்த நிலையில், ஆண்டிபட்டியைச் சோ்ந்த மோகன் என்பவா் திலீப், கலுவா ஆகியோரை கடந்த ஏப்.15-ஆம் தேதி கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு தேனி நகராட்சி பேருந்து நிலையத்துக்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து, மோகன் உள்ளிட்ட 4 போ் கொண்ட கும்பல் திலீப், கலுவா ஆகியோரை காரில் கடத்திச் சென்று, போலி நகைகளை கொடுத்து ஏமாற்றியதாகக் கூறி அவா்களைத் தாக்கினாா்களாம்.
பின்னா், கலுவாவை காரிலிருந்து இறக்கிவிட்டு, திலீப்பை மட்டும் மீண்டும் காரில் கடத்திச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கலுவா அளித்த தகவலின் பேரில், திலீப்பின் சகோதரி பெங்களூரைச் சோ்ந்த நிா்மலா தேனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.