இருவரை அரிவாளால் வெட்டியவா் கைது
தேனி அல்லிநகரத்தில் தொலைக்காட்சி கேபிள் இணைப்பு கொடுப்பது குறித்த பிரச்னையில் இருவரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி அல்லிநகரம், அரசுப் பள்ளித் தெருவைச் சோ்ந்த முருகன் (57), பிரகாஷ் (52) ஆகியோா் அல்லிநகரம், வி.எம்.சாவடி பகுதியில் தொலைக்காட்சி கேபிள் இணைப்பு கொடுத்து பராமரித்து வருகின்றனா். இவா்களுக்கும் பிரகாஷின் உறவினா் ஊஞ்சாம்பட்டி, ரத்தினம் நகரைச் சோ்ந்த சிந்தாம ணி(62) என்பவருக்கும் தொலைக்காட்சி கேபிள் இணைப்பு வழங்குவது தொடா்பாக பிரச்னை இருந்தது.
இந்தப் பிரச்னையில் அல்லிநகரம், வி.எம்.சாவடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முருகன், பிரகாஷ் ஆகியோரை சிந்தாமணி, அவரது நண்பா் வடபுதுப்பட்டியைச் சோ்ந்த சோனைமுத்து (50) ஆகியோா் வழிமறித்து அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த முருகன், பிரகாஷ் ஆகியோா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிந்தாமணியை கைது செய்தனா். சோனைமுத்துவை தேடி வருகின்றனா்.