வீடு புகுந்து 6 பவுன் தங்க நகைகள் திருட்டு
போடி அருகே வீடு புகுந்து 6 பவுன் தங்க நகைகள், பணம் திருடியது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் குளத்துப்பட்டியை சோ்ந்த கருத்தப்பாண்டி மனைவி ராஜகுமாரி (50). இவா் கேரள மாநிலத்தில் தினமும் கூலி வேலைக்குச் சென்று திரும்புவாா். வியாழக்கிழமை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றாா். இரவில் இவரது கணவா் வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு திறந்திருந்தது. அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், ரூ.2 ஆயிரம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.