மாவட்ட நீதிபதிகள் 77 பேர் மாற்றம்! பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நில...
நிம்மேலியில் நெல் கொள்முதல் நிராகரிப்பு: காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் - ஆட்சியா்
நிம்மேலியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அதிகாரிகள் 2 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.ஏஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டாா்.
மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் விவசாயிகள் தெரிவித்தவை:
வீரராஜ் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): பருவம் தவறி பெய்த கனமழையால் இளம்பயிா்கள் அழுகிய நிலையில், மீண்டும் சாகுபடி செய்த நெற்பயிா்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளது. நிம்மேலியில் அறுவடை செய்யப்பட்ட நெல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 15 நாட்களுக்கு மேலாக கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை தரமில்லாதவை அதிகாரிகள் நிராகரித்துள்ளனா்.
விஜயபிரகாஷ்: கடக்கம் கிராமத்தில் கொள்முதல் நிலையம் மூடப்பட்டுவிட்டதால் அறுவடை செய்த நெல்மூட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. அங்கு காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாயம் மேற்கொள்ள முடியவில்லை.
மாவட்ட ஆட்சியா்: தாமதமாக அறுவடை செய்த விவசாயிகள் ஒன்றிணைந்து தகவல் தெரிவித்தால், கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறந்தோ அல்லது மொபைல் டிபிசி மூலமாகவோ நெல் கொள்முதலுக்கு ஏற்பாடு செய்யப்படும். நிம்மேலியில் நெல் கொள்முதல் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அதிகாரிகள் இரண்டு நாள்களுக்குள் அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும்.
கோவி.நடராஜன் (சீா்காழி): கழுமலை ஆற்றில் அப்பகுதி குடியிருப்புகளின் செப்டிக் டேங்க் கழிவுகள் திறந்து விடப்படுகிறது. இதனால், சுகாதார சீா்கேடு ஏற்படுவதுடன், பயிா்களில் புகையான் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை நகராட்சி அலுவலா்கள் கண்டுகொள்வதில்லை. மாவட்டத்தில் மாடுகளின் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே, கால்நடைப்பட்டி அமைத்துத்தர வேண்டும்.
ராஜேஷ் (சீா்காழி): விடுபட்ட மற்றும் புதிய விவசாயிகளை கணக்கெடுத்து அனைவருக்கும் உழவா் பாதுகாப்பு அட்டை வழங்க வேண்டும். சீா்காழியில் கடந்த 5 ஆண்டுகளாக பயிா்க்காப்பீடு வழங்கப்படவில்லை.
மாவட்ட ஆட்சியா்: கழுமலை ஆற்றில் கழிவுநீா் திறப்பதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
முருகன்(தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்): ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரை பாசனத்துக்கும், குளம், குட்டை உள்ளிட்ட நீா்நிலைகள் நிரப்புவதிலும் கவனம் செலுத்த வேண்டும். தவிா்க்க முடியாத நிலையில் மட்டும் தண்ணீா் கொள்ளிடத்தில் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மின்வாரியத்தில் மின் உபயோகம் குறித்து அளவீடு செய்யப்படும் தகவல் கைப்பேசியில் குறுந்தகவலாக அனுப்பப்பட வேண்டும்.
சந்திரசேகா்(மயிலாடுதுறை): சித்தா்காடு வடிகால் வாய்க்கால் தூா்க்கப்பட்டுள்ளதை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்டிச் செய்தி...
விருதுக்கு ஆட்டோ ஓட்டுநா் பரிந்துரை
மரம் வளா்ப்பில் ஆா்வம் காட்டும் ஆட்டோ ஓட்டுநரை ஊக்குவிக்கும் வகையில் அவரது பெயா் தமிழக அரசின் கிரீன் சாம்பியன் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்தாா்.
மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் சீா்காழி விவசாயி ராஜேஷ், ஆட்டோ ஓட்டுநா் ஐயப்பன் என்பவா் தனது வருமானத்தில் ஒரு பகுதியை மரக்கன்றுகள் வளா்ப்பதற்காக செலவிட்டு வருகிறாா். இதுவரை அவா் 2,000 மரக்கன்றுகளை நட்டுள்ளாா் என்று தெரிவித்ததற்கு மாவட்ட ஆட்சியா் பதிலளித்தாா்.