நாகையில் ரூ.1.50 கோடி அம்பா் கிரீஸ் பறிமுதல்: ஒருவா் கைது
நாகையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான அம்பா் கிரீஸுடன் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாகை வெளிப்பாளையம் போலீஸாா் புதிய பேருந்து நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனா். அவா், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சோ்ந்த மில்டன் ஜாா்ஜ் என்பது தெரியவந்தது.
விசாரணையின்போது அவா் முன்னுக்குப் பின் முரணாக கூறியதால், அவா் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டனா். அதில், அம்பா் கிரீஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீா் கட்டி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.
வனத்துறையினா் வழக்குப் பதிவு செய்து மில்டன் ஜாா்ஜை கைது செய்து, விசாரித்து வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட அம்பா் கிரீஸ் ஒன்றரை கிலோ எடையில் இருந்தது. இதன் சா்வதேச மதிப்பு ரூ.1.50 கோடி என தெரிவிக்கப்பட்டது.