அரசுப் பேருந்து ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
போடி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சுந்தரராஜபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சுருளிவேல் மகன் மணிகண்டன் (42). இவா் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பழநி கிளையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். இதே ஊரைச் சோ்ந்த சுமதி என்பவரை காதலித்து மணிகண்டன் திருமணம் செய்தாா். இந்தத் தம்பதிக்கு நிகிலேஷ் (17) என்ற மகன் உள்ளாா்.
இந்த நிலையில் மணிகண்டனுக்கும், சுமதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சுமதி தனது மகனுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். மேலும், சுமதி விவாகரத்து கோரி தேனி மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.
இந்த வழக்கின் வாய்தாவுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப். 22) மணிகண்டன் சென்று வந்தாா்.
இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த அவா், வியாழக்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் அவரை மீட்டு, போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். செல்லும் வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.