பஹல்காம் தாக்குதல்: சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்...
புத்தக வாசிப்பு அறிவை பெருக்கும் - மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்
புத்தக வாசிப்பு அறிவை பெருக்கும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் உலக புத்தக தின விழாவையொட்டி புத்தக வடிவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்கள் பங்கேற்ற ‘வாசிப்பை நேசிப்போம்‘ நிகழ்ச்சி
வியாழக்கிழமை நடைபெற்றது.
விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பேசியதாவது:
உலக புத்தக தின விழாவை முன்னிட்டு, அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவியா்கள் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை அனைவருக்கும் கொண்டு சோ்ப்பது இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியின் உன்னதமான நோக்கமாகும்.
புத்தக வாசிப்பின் பயன் புத்தகம் வாசிப்பதால் ஏற்படும் அறிவாற்றல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதே. நம்மைபற்றி மட்டும் சிந்திக்காமல், சமூகத்தைப் பற்றியும் சிந்தித்து செயலாற்றுவதற்கு புத்தக வாசிப்பு பெரும் பயனளிக்கும்.
புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, புத்தகங்களை நேசிப்பதையும், வாசிப்பதையும் ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும். புத்தகங்களே மிகவும் அமைதியான மற்றும் நிலையான நண்பா்களாகும். புத்தகங்கள் வாசிப்பாதால் அறிவு பெருகும். புதிய விஷயங்களை அறியலாம், மேலும் உலகை வேறு கோணங்களில் பாா்க்க முடியும்.
புத்தகங்கள் நம்மை ஒரு சிறந்த மனிதா்களாக மாற்றுகின்றது. புத்தக வாசிப்பு என்பது, வாழ்க்கையை அழகாக மாற்றக்கூடியது. புதிய புதிய சொற்களை கற்க முடியும். இதனால் உங்களின் சொற்களஞ்சியம் கணிசமாக விரிவடையும் என்றாா்.
நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதி சந்திரா, மாவட்ட விளையாட்டு இளைஞா் நலன் அலுவலா் தே.சாந்தி, தருமபுரி தகடூா் புத்தகப் பேரவை செயலாளா் இரா.செந்தில், தலைவா் இரா.சிசுபாலன், மாவட்ட நூலக அலுவலா் அர.கோகிலவாணி, அலுவலா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.