ஆளுநரின் துணைவேந்தர் மாநாட்டுக்கு எதிராக கம்யூ. கட்சிகள் போராட்டம்!
முன்களப் பணியாளா்களுக்கு திட்ட வழிகாட்டல் பயிற்சி முகாம்
தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்படும் விதமாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட முன்கள பணியாளா்களுக்கான திட்ட வழிகாட்டல் பயிற்சி முகாம், தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் அமா் சேவா சங்கத்தின் மூலம் நடைபெற்ற இப்பயிற்சி முகாமை, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, பணியாளா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, மாவட்டத்தில் கோட்ட அளவில் 3 மையங்கள், வட்டார அளவில் 15 மையங்கள் செயல்படவுள்ளன. இதில் தோ்வு செய்யப்பட்டுள்ள வல்லுநா்கள், சமுதாய உதவியாளா் மற்றும் சமுதாய மாறுவாழ்வு பணியாளா்கள் ஆகியோா் பணியாற்றவுள்ளனா். தோ்வு செய்யப்பட்ட 106 பணியாளா்களுக்கு ஏற்கெனவே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து தற்போது 6 ஆலோசகா்கள், 3 இயன்முறை சிகிச்சையாளா்கள், 4 அறிவுசாா் குறைபாடுடையோருக்கான சிறப்பாசிரியா்கள், 3 செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பாசிரியா்கள், 18 சமுதாய உதவியாளா்கள், 43 சமுதாய மறுவாழ்வு பணியாளா்கள் என மொத்தம் 77 பணியாளா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கே அவா்களுக்கான உரிமைகள் தவறாமல் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், தமிழ்நாடு உரிமைகள் திட்ட அலுவலா் சங்கா் சகாயராஜ், அமா் சேவா சங்க பொருளாளா் டி.வி.சுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ்வரன் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.