பஹல்காம் தாக்குதல்: சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்...
மேலும் 724 குளங்களில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி: ஆட்சியா்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 724 குளங்களில் விவசாயிகள் மண் எடுக்க அனுமதி வழங்கப்படவுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள்கூட்டம், ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: தோவாளை கால்வாயில் தற்போது அதிக அளவு தண்ணீா் வருவதால் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நீா்வரத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
குளங்களில் மண் எடுக்க அனுமதி கேட்டால் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலைக்கழிக்கிறாா்கள். வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறாா்கள். விவசாயிகள் மண் எடுக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றனா்.
இதற்கு பதிலளித்து ஆட்சியா் கூறியதாவது: தமிழக அரசின் முக்கியமான திட்டங்களில் குளங்களை ஆழப்படுத்துவதும் ஒன்றாகும். அதனடிப்படையில்தான் விவசாயிகள் குளங்களில் இருந்து மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முதல்கட்டமாக 609 குளங்களில் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 724 குளங்களில் மண் எடுக்க அனுமதிக்கப்பட உள்ளது. இதில் கிராமங்களில் உள்ள சிறிய குளங்களிலும் மண் எடுக்கலாம். அந்தக் குளங்களில் மண் எடுக்கும்போது பொதுப்பணித் துறை அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை. வட்டாட்சியா்களின் அனுமதியுடன் மண் எடுக்கலாம்.
மண்பாண்டத் தொழிலாளா்கள் மண் எடுக்க அனுமதி கேட்டாலும் உடனே வழங்கப்படுகிறது என்றாா் அவா்.
கூட்டத்தில், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, வேளாண்மை இணை இயக்குநா் ஜென்கின் பிரபாகா், நீா்வளத் துறை செயற்பொறியாளா் அருள் சன்பிரைட், தோட்டக்கலை துணை இயக்குநா் ஷீலா ஜான், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை செயற்பொறியாளா் பாரதி, மாவட்ட குற்றப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் செந்தாமரைசெல்வன், துணை வன காப்பாளா் பிரதாப் உள்பட பலா் கலந்து கொண்டனா்.