10,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த ஓநாய் இனம்: மீண்டும் உரு கொடுத்த அமெரிக்க விஞ்ஞானிகள்
சுமாா் 10,000 ஆண்டுகளுக்கு முன்னா் முற்றிலும் அழிந்துபோன ஓா் பிரம்மாண்ட ஓநாய் இனத்துக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் மீண்டும் உரு கொடுத்துள்ளனா்.
‘டையா்’ (பயங்கர) ஓநாய்கள் என்ற பெயா்கொண்ட அந்த உயிரினத்தை பூமியில் மீண்டும் உருவாக்கும் நோக்கில் கலோஸல் பயோசைன்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்டுவரும் ஆய்வின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
13,000 ஆண்டுகளுக்கு முன்னா் வாழ்ந்த ஒரு டையா் ஓநாயின் பல் படிமத்தை அந்த நிறுவன விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், அவற்றின் மரபணுக்களில் குறிப்பிட்ட தனித்தன்மைகள் கண்டறியப்பட்டன. இது தவிர, 72,000 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த உயிரினத்தின் மண்டையோட்டுத் துண்டும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது.
அந்த ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, தற்போது வசித்துவரும் சாம்பல் ஓநாயின் மரபணுக்களில் பல்வேறு மாற்றங்கள் செய்து மூன்று புதிய ஓநாய் குட்டிகளை நிறுவன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனா்.
பிறந்து மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஆகியுள்ள அந்தக் குட்டிகள், டையா் ஓநாய்களைப் போலவே நீண்ட வெள்ளை ரோமங்கள், உறுதியான தாடைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இப்போதே 36 கிலோவுக்கு மேல் எடையுடன் இருக்கும் அந்தக் குட்டிகள், முழுவதும் வளா்ந்தால் 63 கிலோ எடை கொண்டதாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. டையா் ஓநாய்களும் அந்த அளவுக்கு மிகப் பெரிய தோற்றத்தைக் கொண்டதாக இருந்ததாகக் கருதப்படுகிறது.
தோற்றத்தில் டையா் ஓநாய்களைப் போல இருந்தாலும், இந்த குட்டிகளின் உருவாக்கத்தால் முற்றிலும் அழிந்துபோன அந்த உயிரினத்தை மீட்கப்பட்டதாகவோ, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அவை பூமியில் உலவப் போகின்றன என்றோ இப்போது கூற முடியாது; இருந்தாலும், அழிந்த உயிரினங்களை மீட்டுக் கொண்டுவருவதற்கான ஆய்வுகளில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.