ரீல்ஸ் எடுத்தவர்களை திருத்தி விடியோ வெளியிடவைத்த போலீசார்! விழிப்புணர்வு முயற்சி!!
சூலூர்: கருமத்தம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்ட மூன்று இளைஞர்களை காவல்துறை அறிவுரை கூறி திருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிக்சன், சஞ்சய், தமிழ் ஆகிய மூன்று இளைஞர்கள், சாலைகளில் இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பதிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு பதிலளிக்கும்விதமாக, இளைஞர்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தை விடியோவாக பதிவு செய்து அதையும் ரீல்ஸாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர்.
இதையடுத்து, காவல்துறையினர் மூவரையும் அழைத்து அபராதம் விதித்ததுடன், இத்தகைய செயல்கள் தவறு என்பதை உணர்த்தி அறிவுரை வழங்கினர்.
காவல்துறையின் அறிவுரையை ஏற்ற மூவரும், தாங்கள் இனி இவ்வாறு செய்யமாட்டோம் என உறுதியளித்து, தங்கள் தவறை உணர்ந்து அதை விளக்கும் வகையில் புதிய ரீல்ஸ் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர்.
இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவது ஆபத்தானது என்பதை விளக்கி, மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவர்கள் வெளியிட்ட இந்த ரீல்ஸ், கருமத்தம்பட்டி பகுதியில் வேகமாக வாகனம் ஓட்டும் இளைஞர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவல்துறையின் இந்த விழிப்புணர்வு முயற்சி பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.