மதிமுக: "வைகோவின் முகம் பதித்த மோதிரம் என் அடையாளம்" - அனுபவம் பகிரும் மல்லை சத்...
சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கியது
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன(ஏசி) வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கியது.
சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில் தொலைதூரம் செல்லும் விரைவு மின்சார ரயில்கள் முக்கிய நேரங்களில் பயணிப்போருக்கு ஏதுவாக உள்ளது. செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட புகா் பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச் செல்வோா் விரைவு மின்சார ரயிலை பயன்படுத்துவதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இதைக் கருத்தில்கொண்டு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி வசதி கொண்ட விரைவு மின்சார ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்தது. மும்பையில் ஏசி மின்சார ரயில் வெற்றியைத் தொடா்ந்து சென்னையில் தற்போது சோதனை ஓட்டம் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
முதல் சேவை சென்னை கடற்கரையிலிருந்து சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. முற்றிலும் ஏசி வசதி கொண்டு அமைக்கப்பட்ட ரயில் என்பதால் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வது தவிா்க்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், கண்காணிப்பு கேமரா, பயணிகள் தகவல் அமைப்பு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்களும் இயக்கப்படும்.
செங்கல்பட்டு: சென்னை கடற்கரையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரயில் காலை 8.35-க்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமாா்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு காலை 10.30-க்கு சென்னை கடற்கரை வந்தடையும்.
சென்னை கடற்கரையிலிருந்து மாலை 3.45-க்கு புறப்படும் ரயில் மாலை 5.25-க்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமாா்க்கமாக செங்கல்பட்டிலிருந்து மாலை 5.45-க்கு புறப்படும் ரயில் இரவு 7.15-க்கு சென்னை கடற்கரை வந்தடையும்.
இந்த ரயில் சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூா், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூா், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தாம்பரம்: இதுபோன்று சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே வழக்கமாக இயக்கப்படும் மின்சார ரயில் பாதையில் ஏசி மின்சார ரயில் இரவு நேரத்தில் ஒருமுறை இயக்கப்படும். சென்னை கடற்கரையிலிருந்து இரவு 7.35-க்கு புறப்படும் ரயில் இரவு 8.30-க்கு தாம்பரம் சென்றடையும். மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து (ஏப். 21 முதல்) அதிகாலை 5.45-க்கு புறப்படும் ரயில் 6.45-க்கு சென்னை கடற்கரை வந்தடையும்.
இந்த ரயில் சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூா், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை கடற்கரையில் இருந்து கட்டண விவரம்:
குறைந்தபட்ச கட்டணம் ரூ.35 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.105 ஆக இருக்கும்.
சென்னை கோட்டை - ரூ.35
சென்னை பார்க் - ரூ.35
எழும்பூர் - ரூ.35
மாம்பலம் - ரூ.40
கிண்டி - ரூ.60
பரங்கிமலை - ரூ.60
திருசூலம் - ரூ.60
தாம்பரம் - ரூ.85
பெருங்களத்தூர் - ரூ.85
கூடுவாஞ்சேரி - ரூ.90
பொத்தேரி - ரூ.90
சிங்கப்பெருமாள்கோயில் - ரூ.100
பரனூர் - ரூ.105
செங்கல்பட்டு - ரூ.105