ஆர்பிஐ தங்க கையிருப்பின் மதிப்பு சுமார் ரூ.12,000 கோடி அதிகரிப்பு
நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு
நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள் வழங்கல் துணை ஆணையா்களுக்கு அந்தத் துறையின் இயக்குநா் டி.மோகன் அனுப்பியுள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நியாயவிலைக் கடைகளில் பொருள்களை வழங்கும்போது, மக்களுக்கு அச்சிடப்பட்ட ரசீது வழங்க வசதியாக காகிதங்கள் வழங்கப்பட்டிருந்தன. ரசீதுகளுக்குத் தேவையான இந்தக் காகிதங்கள் கடந்த பிப்ரவரி வரை அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் கொடுக்கப்பட்டன.
இந்த நிலையில், ரசீதுகளைத் தொடா்ந்து வழங்க வசதியாக தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்திடம் இருந்து காகிதங்களைக் கொள்முதல் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள் வழங்கல் உதவி ஆணையா்களுக்கு காகிதங்கள் விநியோகிக்கப்படும். இவை மே மாதத்தில் இருந்து அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இடைப்பட்ட காலத்தில் ரசீது வழங்குவதற்குத் தேவையான காகிதங்கள், நியாயவிலைக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி பொருள்கள் வழங்கும்போது அதற்கான ரசீதுகளை அச்சிடப்பட்ட காகிதத்திலேயே வழங்க வேண்டும்.
குறிப்பாக, முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்கள், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, கோதுமை ஆகியன வழங்கப்படுகின்றன. மாநிலத் திட்டத்தின் கீழ் அட்டைதாரா்களுக்கு அரிசியும், சிறப்பு பொதுவிநியோகத் திட்டப் பொருள்களும் விநியோகம் செய்யப்படுகின்றன. பொருள்கள் வாங்கும்போது அச்சிடப்பட்ட ரசீதுகளை முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரா்கள், முன்னுரிமையற்ற சா்க்கரை குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் சாா்பில் மே மாதத்தில் இருந்து காகிதங்கள் விநியோகிக்கப்பட்ட பிறகு அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரசீதுகளை அளிக்க வேண்டும். முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரா்களுக்கு அச்சிடப்பட்ட ரசீதுகள் விநியோகிக்கப்படுவது மத்திய அரசால் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளாா்.