மேல்பாதி: சமூகப் பிரச்னையால் மூடப்பட்ட கோயில்; நீதிமன்ற உத்தரவால் திறப்பு... முழு பின்னணி!
அமைதிப் பேச்சு வார்த்தை தோல்வி
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில். கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு கடந்த 2016-ம் ஆண்டு கும்பாபிஷேகமும், 2022-ம் ஆண்டு தர்மர் பட்டாபிஷேக விழாவும் நடைபெற்றது. அதே சமயம் இந்தக் கோயிலில் பட்டியலின மக்கள் தரிசனம் செய்வதற்கு, மாற்றுச் சமூகத்தினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தனர்.
இந்நிலையில்தான் 2023-ம் ஆண்டு இங்கு தீமிதி விழா நடைபெற்றது. அப்போது சாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்ற பட்டியல் சமூக இளைஞர் கதிரவன் என்பவரை, அங்கிருந்த மாற்றுச் சமூகத்தினர் தாக்கினர். அப்போது கதிரவனை மீட்க வந்த பெற்றோரும் தாக்கப்பட்டனர்.

அதனால் அன்று இரவே விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்ட பட்டியல் சமூக மக்கள், கதிரவனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகாரளித்தனர். அதேபோல கதிரவனை தாக்கிய தரப்பினரும் பட்டியல் சமூக மக்கள் தங்களை தாக்கியதாக போலீஸில் புகாரளித்தனர்.
அதையடுத்து இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தால் மேல்பாதி கிராமத்தில் பதற்றம் நிலவியதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும், போலீஸாரும் இரு தரப்பினருக்கும் இடையே பலமுறை அமைதி பேச்சுவார்த்தையை நடத்தினர். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சீல் வைக்கப்பட்ட கோயில்
அதேசமயம் மேல்பாதி கிராமத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழல் தொடர்ந்து கொண்டிருந்தது. அதனால் கடந்த 2023 ஜூன் மாதம், 145-வது சட்டப் பிரிவின்படி வருவாய் துறையினர் கோயிலைப் பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து கிராமத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக ஜுன் 9-ம் தேதி இரு தரப்பினரும் தனது அலுவலகத்தில் ஆஜராகி, உரிய ஆவணங்களுடன் எழுத்துப்பூர்வ பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார் விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன். அதன்படி அன்றைய தினம் இருதரப்பினரும் ஆஜரானார்கள். ஆனால் சுமுகமான முடிவு எடுக்கப்படாததால், வேறு ஒருநாளில் மறு விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து இரண்டாம் கட்ட விசாரணை ஜூலை 7-ம் தேதி நடைபெற்றது. அதில் பட்டியல் சமூக மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று வருவாய் துறை தரப்பில் கூறப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பட்டியல் சமூக மக்களின் வழக்கறிஞர், ``ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அரசு பட்டியல் சமூக மக்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்லவில்லை என்றால், சாதியின் பெயரால் எங்களை இழிவுபடுத்தும் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது என்ற முடிவை எடுத்திருக்கிறோம்.
அதற்காக ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பட்டியல் சமூக மக்கள் குடியிருப்பு பகுதியில் கறுப்புக்கொடி ஏற்றுவது எனவும் முடிவு செய்து இருக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார். அதேசமயம் பட்டியல் சமூக மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்றனர் மாற்று சமூகத்தினர்.
அனைத்து சமூக மக்களுக்கும் அனுமதி
தொடர்ந்து, சீல் வைக்கப்பட்ட கோயிலை திறக்க வேண்டும் என்று மாற்று சமூக மக்களும், கோயிலின் அறங்காவலரான ராஜியும் கடந்த 2024 மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் தொடர்ச்சியாக, ``கோயிலில் தினம் தோறும் பூஜைகள் நடத்துவதற்கு இந்து அறநிலையத்துறை ஒரு பூசாரியை நியமிக்க வேண்டும். பூஜைகள் முடிந்தவுடன் கோயிலை பூட்டிவிட வேண்டும். பூசாரியைத் தவிர வேறு யாரையும் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் யாரேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சித்தால், அவர்களுக்கு எதிராக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம்.

அதன் பிறகு, `கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை. பூசாரிகள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திரௌபதி அம்மன் கோயிலில் திருவிழா நடத்தப்படவில்லை’ என்று கோயிலின் அறங்காவலரான ராஜி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2025 பிப்ரவரி 20-ம் தேதி நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறோம் என்று உறுதியளித்தது காவல்துறை. அதையடுத்து, ``திரௌபதி அம்மன் கோயிலில் அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் அடிப்படையிலேயே இன்று கோயில் திறக்கப்பட்டிருக்கிறது.