தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை சொன்ன பதில்!
`ரூட்டை மாற்றி..!’ - விருந்து வைத்து அழைக்கும் கார்த்தி சிதம்பரம் - தலைவர் பதவிக்கு `குறி’?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மீது பல்வேறு புகார்கள் கிளம்பின. இதையடுத்து அந்த பதவிக்குத் தீவிரமாகக் காய் நகர்த்தியவர்களில் கார்த்தி சிதம்பரமும் ஒருவர். அந்த நேரத்தில்தான், 'மோடியைப் புகழ்ந்து பேசி அகில இந்தியத் தலைமைக்கு எதிராக கார்த்தி செயல்படுகிறார்' எனச் சிலர் போர்க்கொடி தூக்கினார்கள். இதனால் அப்போது அவரின் முயற்சி கைகூடாமல் போனது.

இதையடுத்து தங்களின் ஆதரவாளரான செல்வப்பெருந்தகைக்கு பதவி பெற்றுக் கொடுத்தனர் எதிர் தரப்பினர். இந்தச்சூழலில்தான் தற்போதைய தலைவர் செல்வப்பெருந்தகை மீதும் அடுக்கடுக்கான புகார்கள் கிளம்பியிருக்கின்றன. இதையடுத்து சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பதவிக்கான ரேஸ் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது என்கிறார்கள் கதர்கள். இதில்தான், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கோதாவில் குதித்திருக்கிறார், கார்த்தி சிதம்பரம்.
ரூட்டை மாற்றும் கார்த்தி
இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள் சிலர், "கார்த்தி சிதம்பரத்தின் தந்தை சிதம்பரம் அகில இந்தியத் தலைமையுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு வந்ததில் சிதம்பரத்தின் பங்கு முக்கியமானது. ஆனால் மகன் கார்த்தியைத் தலைவராக்க அவர் போடும் திட்டங்கள் ஒர்கவுட் ஆகுவதில்லை. இதற்குத் தொண்டர்கள், சீனியர் நிர்வாகிகள், மதிக்காமல் கார்த்தி செயல்படுவதுதான் காரணம். இதை தற்போது கார்த்தியும் புரிந்துகொண்டிருக்கிறார்.

எனவே மாநிலம் முழுவதும் தனக்கான ஆதரவாளர்களை அதிகரிக்கத் திட்டம் வகுத்திருக்கிறார். அதன்படி மறைந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் ஆதரவாளர்களை தன் பக்கம் கொண்டுவருவதற்காக கார்த்தி காய் நகர்த்தி வருகிறார். சமீபத்தில் சென்னையில் இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு விருந்து அளித்துள்ளார். இதில், ரங்கபாஷ்யம், சிவராமன், ஏ.ஜி.சிதம்பரம் என இளங்கோவனின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆனால் கார்த்தி எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் வரவில்லை. இதற்கு, 'இருப்புச்சட்டி சூடு தாங்காமல் அடுப்புக்குள் விழுந்த கதையாகிவிடும்' என, தொண்டர்களைப் பலர் நினைப்பதுதான் காரணம். அதாவது தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் வகையில் கார்த்தியின் செயல்பாடு இல்லை. எனவே தனது அணுகுமுறையை அவர் மாற்றிக்கொள்ளும் வரை தொண்டர்கள் அவர் பின்னால் செல்ல மாட்டார்கள். தலைவர் பதவி கிடைப்பதும் பெரும் சிரமம்தான்" என்றனர்.

`கார்த்தி சிதம்பரம் பின்னால் செல்வதற்கும் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை!’
இதுகுறித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் ஆதரவாளர் சிவராமன் நம்மிடம், " 'தனியார் ஹோட்டலில் நடந்த விருந்தில் கலந்துகொள்ள வேண்டும்' என, கார்த்தி சிதம்பரம் தரப்பிலிருந்து எங்களை வற்புறுத்தினர். அதற்கு, 'முதலில் நாங்கள் வரவில்லை' என, தெரிவித்துவிட்டோம். பிறகு தொடர்ந்து கேட்டுக்கொண்டதன் அடிப்படையில்தான் விருந்தில் கலந்து கொண்டோம். ஆனால், அங்கு அரசியல் எதுவும் பேசவில்லை. அவர் ஒருவேளை மாநில தலைவராக வருவதற்கு இப்படியெல்லாம் காய் நகர்த்தி இருக்கலாம். ஆனால் நாங்கள் யாரும் கார்த்தி சிதம்பரம் பின்னால் செல்வதற்கும் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. எந்த தலைவர் சிறப்பாகச் செயல்படுகிறார்களோ அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம்" என்றார்.
இதுகுறித்து கார்த்தியின் ஆதரவாளர்கள் சிலர், "தலைவர்கள் பலர் தொண்டர்களின் விருப்பம் குறித்துக் கேட்பதில்லை. எனவே அதைப் போக்கும் வகையில்தான் இந்த விருந்துக்கு கார்த்தி சிதம்பரம் ஏற்பாடு செய்தார். இதில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கே.எஸ்.அழகிரி, மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்களை தன்னுடன் பயணிக்க வேண்டும் எனத் தலைவர் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பேசியவர், 'பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுத்தால்தான் தமிழகத்தில் கட்சி வளரும்.

ஆனால் இங்குள்ள எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் யாரும் அதைச் செய்வதில்லை. சமீபத்தில் கூட கூவத்தைச் சுத்தம் செய்ய வேண்டும் என அறிக்கை கொடுத்தேன். அதற்கு என்னுடன் சேர்ந்து யாரும் குரல் கொடுக்கவில்லை. இப்படிப் பல விஷயங்களை என்னால் பட்டியலிட முடியும். எப்படியோ நடந்ததெல்லாம் நடந்ததாக இருக்கட்டும். இனியாவது நாம் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும்' எனத் தெரிவித்தார். அதற்குக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்" என்றார்.
செல்வப்பெருந்தகையின் பதவிகாலம் முடிய இன்னும் நிறைய அவகாசம் உள்ளது. எனினும் டெல்லிக்கு பறக்கும் புகார் காரணமாக, தேர்தலுக்கு முன்பாக எதாவது மாற்றம் நிகழும் என கார்த்தி சிதம்பரம் தரப்பு நினைக்கிறதாம். ஆனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாலும், திமுக ஆதரவு செல்வபெருந்தகைக்கு இருப்பதாலும், தேர்தலுக்கு ஓராண்டே இருப்பதாலும் இப்போதைக்கு தலைவர் மாற்றத்துக்கு எல்லாம் வழி இல்லை என்கிறது மற்றொரு தரப்பு.!