ஹார்வர்டு பல்கலை.க்கு அளிக்கப்படும் வரி விலக்கு ரத்து?
ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு அளிக்கப்படும் வரி விலக்கை ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் மக்களின் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து அவர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துவது வழக்கம்.
பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் படுகொலை செய்வதற்கு கண்டனம் தெரிவித்து நீண்ட போராட்டத்தை ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.
ரூ. 19,000 கோடி நிதி நிறுத்திவைப்பு
மாணவர்களின் போராட்டங்களை தடுக்கும் நோக்கிலும் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாகவும் பல்வேறு நிபந்தனைகளை ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு டிரம்ப் அரசு விதித்தது.
“பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து தணிக்கை மேற்கொள்ள வேண்டும், ஆசிரியர்கள், மாணவர்கள் அமைப்புகளின் குழுத் தலைவர்களின் பின்புலம் ஆராய வேண்டும், முகக்கவசம் அணியக்கூடாது” போன்ற நிபந்தனைகள் அடங்கும்.
இந்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று ஹார்வர்டு பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்ததை தொடர்ந்து, பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 19,000 கோடி (2.2 பில்லியன் அமெரிக்க டாலர்) நிதியை நிறுத்திவைக்க அமெரிக்க அரசு உத்தரவிட்டது.
மேலும், பல்கலைக்கழகத்துக்கான ரூ. 514 கோடி ஒப்பந்தத்தையும் முடக்குவதாக அமெரிக்க அரசு அறிவித்தது.
டிரம்ப் எச்சரிக்கை
அரசியல், சித்தாந்தம் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அல்லது ஆதரிப்பதை தொடர்ந்தால், ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு, அரசியல் நிறுவனமாக கருதப்பட்டு வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், உள்நாட்டு வருவாய் சேவை அட்டர்னி ஜெனரலிடம், ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான வரி விலக்கை ரத்து செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், அமெரிக்காவில் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரி விலக்கை ரத்து செய்வது மிகவும் அசாதாரணமான சூழலில் மட்டுமே நடக்கிறது.
இதற்கு முன்னதாக, மாணவர்கள் சேர்க்கையில் இனப் பாகுபாடு கொள்கை இருந்ததால், 1980-களில் கிறிஸ்தவக் கல்லூரியின் வரி விலக்கை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.