தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யும், ஆனால்.. !
தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு லேசான மழை பெய்யும், ஆனால் அதேவேளையில் வெய்யிலும் வெளுத்துகட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் நேற்று காலை சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த திடீர் மழையால் பூமி குளிர்ந்தது. வெய்யிலின் தாக்கம் குறைந்து நேற்று முழுவதும் இதமான காலநிலை நிலவியது.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று(ஏப்ரல் 17) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப். 23 வரை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். வயதானவர்கள், கர்ப்பிணிகள் வெய்யிலில் வெளியில் வருவதைத் தவிர்க்கலாம் இல்லையெனில் அதற்குண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் மேடவாக்கம் 16 செ.மீ மழையும், வளசரவாக்கம், சாலிகிராமம் தலா 11, கும்மிடிப்பூண்டி, நெற்குன்றம் தலா 10 செ.மீ, அண்ணா பல்கலை, வளசரவாக்கம் தலா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.