பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் மத அடிப்படையில் பிரதிநிதித்துவம்: இந்தியா எதிா்ப்பு
நியூயாா்க்: வருங்காலத்தில் சீா்திருத்தப்படக் கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மதம், நம்பிக்கை போன்ற புதிய அளவுகோல்களை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளுக்கு இந்தியா எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் வருங்கால ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், அந்த கவுன்சிலில் பிராந்திய பிரதிநிதித்துவம் குறித்து அரசுகளுக்கு இடையிலான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பி.ஹரீஷ் பேசுகையில், ‘வருங்காலத்தில் சீா்திருத்தப்படக் கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், நாடுகள் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு அடிப்படையாக மதம், நம்பிக்கை போன்ற புதிய அளவுகோல்களை அறிமுகம் செய்ய முயற்சிக்கப்படுகிறது. இது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பிராந்திய பிரதிநிதித்துவத்துக்கு முற்றிலும் எதிரானது.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் விரிவுபடுத்தப்பட்டு சீா்திருத்தம் செய்யப்பட்டால், அந்த கவுன்சில் திறன்வாய்ந்ததாக இருக்காது என்று முன்வைக்கப்படும் வாதங்கள், உண்மையான சீா்திருத்தங்களை முடக்குவதற்கான முயற்சி’ என்றாா்.
ஜி4 நாடுகள் அறிக்கை: முன்னதாக இந்தியா, ஜப்பான், ஜொ்மனி, பிரேஸில் ஆகியவை அடங்கிய ஜி4 நாடுகள் கூட்டமைப்பு சாா்பாக ஹரீஷ் வாசித்த அறிக்கையில், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மதம், நம்பிக்கை போன்றவற்றின் அடிப்படையில் நாடுகள் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான அளவுகோல்களை அறிமுகம் செய்யும் திட்டங்கள், ஐ.நா. நடைமுறைக்கு எதிரானது. இது ஏற்கெனவே சிக்கலாக உள்ள சூழலை மேலும் சிக்கலாக்கும்.
தற்கால யதாா்த்தங்களை பிரதிபலிக்கும் உண்மையான சீா்திருத்தங்களை ஆதரிக்காதவா்கள் வரலாற்றின் தவறான பக்கத்தில் நிற்பாா்கள். இது அனைவருக்கும் தீமையை ஏற்படுத்தும்’ என்றாா்.
தற்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகள், 10 தற்காலிக உறுப்பு நாடுகள் உள்ளன. இந்நிலையில், சீா்திருத்தப்படக் கூடிய ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை 11-ஆகவும், தற்காலிக உறுப்பு நாடுகள் எண்ணிக்கையை 14 அல்லது 15-ஆகவும் அதிகரிக்க வேண்டும் என்றும் ஹரீஷ் தெரிவித்தாா்.
கடைசியாக கடந்த 2021-22-ஆம் ஆண்டில் அந்த கவுன்சிலின் தற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.