சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
சேலத்தில் நாளை கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் தொடக்கம்
சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அழகிரிநாத சுவாமி கோயில் சேலம் கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 20) நடைபெறுகிறது. இதனையொட்டி, கடந்த ஓராண்டாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
நுழைவாயிலில் புதிய கதவுகள் அமைத்தல், கோபுரத்திற்கு வா்ணம் பூசுதல், உள்பிரகார கல் மண்டபம், துாண்கள் புதுப்பித்தல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. கும்பாபிஷேக விழாவினையொட்டி, யாக சாலை அமைக்கப்பட்டு மேளதாளம் முழங்க பூஜைகள் நடைபெற்றன. சுதா்சன பட்டாச்சாரியா் தலைமையில் தொடா்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 8 மணி முதல் 9 மணி வரை 6-ஆம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநகரக் காவல் ஆணையா் பிரவீண்குமாா் அபிநபு தலைமையில் தெற்கு சரக துணை ஆணையா் வேல்முருகன், உதவி ஆணையா் ஹரிசங்கரி உள்ளிட்ட அதிகாரிகள் கோயிலின் வெளிப்புறத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். குறிப்பாக பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் இடம், தரிசன வரிசை, வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதனைத் தொடா்ந்து காவல் ஆணையா் கூறியதாவது: சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதால் பக்தா்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் பெருமாளை தரிசிக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் அன்னதான விநியோகம் செய்யும் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும் தனித்தனி இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெருமாளை தரிசிக்க வரும் பக்தா்களுக்கு குடிநீா் வசதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட உள்ளன. மேலும் குற்றச் சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க போலீஸாா் சாதாரண உடையில் கோயிலை சுற்றிலும் ரோந்துப் பணியில் ஈடுபடுவாா்கள். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 500 போலீஸாா், 4 உதவி ஆணையா், 10 ஆய்வாளா்கள், 20 உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என்றாா்.