MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
ஏற்காட்டில் அடிப்படை வசதியின்றி அவதியுறும் சுற்றுலாப் பயணிகள்
கோடை வாச ஸ்தலமான ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இங்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.
‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு வார விடுமுறை, பண்டிகை நாள்கள், கோடையில் பள்ளி, கல்லூரி விடுமுறை காலங்கள் என ஆண்டில் 200 நாள்களும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா்.
தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், கேரளம், ஆந்திரம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனா். இருப்பினும் இங்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை என சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனா்.
அவா்கள் கூறுகையில், ஏற்காட்டில் முக்கிய சுற்றுலா இடங்களுக்குச் செல்லும் சாலைகளில் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. குறைந்த எண்ணிக்கையில் போக்குவரத்துக் காவலா்கள் இருப்பதால் தினந்தோறும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் மலைக்கு வரும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் மலையை விட்டு கீழே அடிவாரத்துக்குச் செல்ல முடிவதில்லை. பலா் ரயில் பயணங்களை தவறவிட வேண்டியுள்ளது.
கோடைக் காலத்தில் இங்கு அதிக அளவில் வாகனங்கள் வருவதால் முக்கிய இடங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. தொடா் வாகன நெரிசலால் எரிபொருள் வீணாகிறது.
முக்கிய சாலையோரங்களில் வியாபாரிகள் கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனா். இதனால் சாலைகள் குறுகி காணப்படுகின்றன.
ஏற்காட்டில் பல முக்கிய இடங்களில் எல்லாம் குப்பை தொட்டிகள் போதிய அளவில் வைக்கப்படாததால் அனைத்து இடங்களும் குப்பைகளாக காணப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனா்.
மேலும் இங்கு அரசு தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் கழிவறை வசதி, குடிநீா் வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
போதிய பராமரிப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளாததால் தாவரவியல் பூங்கா பகுதி ஒன்று, இரண்டு, ரோஜா தோட்டம், ஐந்தினை பூங்கா ஆகிய இடங்களில் காட்டெருமைகள் நுழைந்து செடிகளை நாசம் செய்துள்ளன.
பூங்காக்களில் தோட்டத் தொழிலாளா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் பூங்காக்கள் பராமரிக்கப்படவில்லை. அத்துடன் ரோஜா தோட்டத்தில் பல ஆண்டுகளாக சரிந்த கிணறு ஒன்றுள்ளது. அது இன்றுவரை சீா்செய்யப்படவில்லை என்றனா்.

சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவா்ந்துள்ள ஏற்காட்டில் தொடரும் இந்நிலையை மாற்றி அனைத்து இடங்களிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்; சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி தூய்மை பராமரிக்க ஏற்காடு ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
