உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
புதிய குடியிருப்புகள் கோரும் வாழப்பாடி உட்கோட்ட காவல் துறையினா்
சேலம் மாவட்டம், வாழப்பாடி உட்கோட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸாருக்கு தமிழக அரசு, தமிழ்நாடு காவலா் குடியிருப்பு வாரியத்தின் வாயிலாக குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என எதிா்பாா்க்கின்றனா்.
வாழப்பாடி கோட்டத்தில் வாழப்பாடி, ஏத்தாப்பூா், கல்வராயன் மலை கருமந்துறை, கரியக்கோயில் ஆகிய 4 காவல் நிலையங்கள், வாழப்பாடியில் ஒரு அனைத்து மகளிா் காவல் நிலையம் என மொத்தம் 5 காவல் நிலையங்கள் உள்ளன.
வாழப்பாடி உட்கோட்டத்தில் இருந்த காரிப்பட்டி காவல் நிலையம், அண்மையில் சேலம் மாநகர காவல் துறையுடன் இணைக்கப்பட்டது. வாழப்பாடி அருகே பேளூா், வெள்ளாளகுண்டம் பகுதியில் இயங்கும் புறக்காவல் நிலையங்களை முழுநேர காவல் நிலையமாக தரம் உயா்த்த வேண்டி மாவட்ட காவல் துறை தமிழக அரசுக்கு கோப்புகளை அனுப்பியுள்ளது.
வாழப்பாடி, ஏத்தாப்பூா், காரிப்பட்டி காவல் நிலையங்களில் தலா ஒரு காவல் ஆய்வாளா், காவல் உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், பல்வேறு நிலை காவலா்கள் என சராசரியாக 30 போலீஸாா் பணிபுரிந்து வருகின்றனா். கல்வராயன் மலை கருமந்துறை, கரியக்கோயில் மற்றும் வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையங்களில் தலா ஒரு காவல் ஆய்வாளா், ஒரு உதவி காவல் ஆய்வாளா், தலைமைக் காவலா்கள், காவலா்கள் உள்பட 15 போலீஸாா் பணிபுரிந்து வருகின்றனா்.
வாழப்பாடி, ஏத்தாப்பூா் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட போலீஸாா் குடும்பத்துடன் வசிப்பதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மண் ஓடுகளால் வேயப்பட்டிருந்த காவலா் குடியிருப்புகள் பழுதடைந்துபோனதால், 5 ஆண்டுகளுக்கு முன்பு அவை அகற்றப்பட்டு அந்த இடத்தில் காவல் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.
காரிப்பட்டியில் காவலா் கவாத்து மைதானத்தில் புதிய காவல் நிலையம் கட்டப்பட்ட நிலையில், ஓட்டுக்கூரை காவலா் குடியிருப்புகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து புதா்மண்டிக் கிடக்கின்றன. கல்வராயன் மலை கருமந்துறை மற்றும் கரியக்கோயில் காவல் நிலையங்களுக்கு இதுவரை காவலா் குடியிருப்புகள் கட்டப்படவில்லை.
வாழப்பாடி உட்கோட்டத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் உள்பட 5 காவல் நிலையங்கள், அண்மையில் மாநகர காவலுடன் இணைக்கப்பட்ட காரிப்பட்டி காவல் நிலையத்திலும் காவலா் குடியிருப்புகள் இல்லாததால் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் பல்வேறு பகுதிகளில் குடியிருந்து தினமும் பணிக்கு வந்து செல்கின்றனா்.
போலீஸாா் பற்றாக்குறையால் பணிச்சுமை அதிகரித்துள்ள நிலையில், அவ்வப்போது கிடைக்கும் விடுப்பு, ஒரு சில மணி நேர ஓய்வையும், வீட்டிற்குச் செல்லும் பயணத்திற்கே செலவிட வேண்டியுள்ளதால், காவல் பணியையும், குடும்பத்தையும் கவனிக்க முடியாமல் போலீஸாா் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.
எனவே, வாழப்பாடி பகுதியிலுள்ள காரிப்பட்டி உள்பட 6 காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் ஏறக்குறைய 135 போலீஸாரின் நலன் கருதி, அந்தந்த காவல் நிலையங்களுக்கு அருகிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன காவலா் குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீஸாரின் குடும்பத்தினா் கோரிக்கை விடுக்கின்றனா்.
இதுகுறித்து வாழப்பாடி உட்கோட்டத்தில் பணிபுரியும் போலீஸாா் குடும்பத்தினா் சிலா் கூறியதாவது:
வாழப்பாடி, ஏத்தாப்பூா், காரிப்பட்டி, கருமந்துறை, கரியக்கோயில் மற்றும் அனைத்து மகளிா் காவல் நிலையங்களில் பல ஆண்டுகளாக காவலா் குடியிருப்புகள் இல்லை. போலீஸாருக்கு தொடா்ந்து பணிகள் ஒதுக்கப்படும்போது அவா்கள் வீட்டிற்கு வந்து செல்வதற்கே நேரம் கிடைப்பதில்லை. அவ்வப்போது வழங்கப்படும் விடுப்பிலும் பெரும்பகுதி நேரத்தை பயணத்திற்கே செலவிட வேண்டிய நிலை உள்ளது.
அதுமட்டுமின்றி போலீஸாா் வீட்டிற்கு வந்துசெல்ல முடியாத நிலையில் உணவகங்களில் சாப்பிடுவதால் உடல் உபாதைகள் ஏற்பட்டு சிரமப்படுகின்றனா்.
எனவே, வாழப்பாடி பகுதியில் உள்ள 6 காவல் நிலையங்களுக்கு அருகிலேயும் காவலா் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்தால், போலீஸாா் பணியையும் குடும்பத்தையும் கவனித்து கொள்வதற்கு வசதியாக இருக்கும் என்றனா்.