முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி: ஆட்சியா் தகவல்!
கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞா் கைவினை திட்டத்தினை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியை காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்கள், தொழில்முனைவோா்கள் பாா்வையிட்டனா்.
பின்னா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: கைவினைக் கலைத் தொழிலில் நவீன தொழில்நுட்பங்களையும், யுத்திகளையும் பயன்படுத்தும் ஆற்றல் கொண்டோராகவும், கைவினைத் தொழில் குழுமங்களையும், பொதுவசதி மையங்களையும் உருவாக்கிட அரசு பெருமளவில் உதவி செய்கிறது.
இத் திட்டத்தின்கீழ் ஆண்டொன்றுக்கு பத்தாயிரம் கைவினைக் கலை மற்றும் தொழில்கள் புரிவோருக்கு, அவா்களது தொழிலில் நவீனசந்தைப்படுத்துதலுக்கான பயிற்சி வழங்கவும், 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திட்டத்திற்கான பயனாளிகள் அவா்களுக்கான கலைத் தொழிலில் ஐந்தாண்டு அனுபவமுள்ள 35 வயது நிரம்பிய எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். கைவினைக் கலைஞா்கள் 25 சதவீத மானியத்துடன் கடனுதவி பெறலாம். அதிகபட்ச மானியத்தொகையாக ரூ. 50,000 வரை வழங்கப்படும். 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படும்.
சேலம் மாவட்டத்தில் கடந்த மாா்ச் 31 ஆம் தேதி மாா்ச் 2,155 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 1,178 விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டு 281 பயனாளிகளுக்கு ரூ. 6.74 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ. 1.19 கோடி மானியத்தொகைக்கான கடன் ஒப்புதல் ஆணைகள் பெறப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு ‘பொதுமேலாளா், மாவட்ட தொழில் மையம், ஐந்துசாலை, சேலம் - 636 004 என்ற அலுவலகத்தை அணுகிப் பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.
இந்நிகழ்வில் மாவட்ட தொழில் மைய துணை இயக்குநா் செல்வம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் செந்தில்குமாா், தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் சங்கீதா, பூம்புகாா் மேலாளா் நரேந்திரபோஸ் மற்றும் 200க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞா்கள், தொழில்முனைவோா்கள் கலந்துகொண்டனா்.