மகா காலபைரவா் கோயிலில் அஷ்டமி சிறப்பு யாகம்!
வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவா் கோயிலில், சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகம், வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, முற்பகல் 11 மணிக்கு கோயில் நிறுவனா் பரமானந்த சுவாமி தலைமையில் 108 மூலிகைகள் மற்றும் மட்டை தேங்காய்களைக் கொண்டு சிறப்பு யாகம், 108 சங்காபிஷேகம், பிரபஞ்ச தியானப் பயிற்சி நடத்தப்பட்டது.
பிற்பகல் ஒரு மணிக்கு கால பைரவருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக-ஆராதனை நடைபெற்றது.
பிறகு சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கால பைரவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.