அமெரிக்க துணை அதிபர் நாளை இந்தியா வருகை: வட மாநிலங்களில் மட்டும் சுற்றுப்பயணம்!
UP : `வருங்கால மருமகனுடன் வீட்டைவிட்டு வெளியேறியது ஏன்?’ - விசாரணையில் பெண் சொன்னதென்ன?
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்த சப்னா என்ற பெண்ணின் மகளுக்கு ராகுல் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு 10 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், சப்னா தனது வருங்கால மருமகனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். வீட்டை விட்டு வெளியேறும்போது மகளின் திருமணத்திற்கு சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் ரூ.3.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை சப்னா எடுத்து சென்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் போலீஸார் தேடி வந்தனர். அவர்கள் இருவரும் திடீரென போலீஸில் சரணடைந்துள்ளனர். `ஏன் வருங்கால மருமகனை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்?’ என்பது குறித்து சப்னாவிடம் போலீஸார் விசாரித்தபோது, பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தது.

போலீஸில் சொன்னது என்ன?
சப்னாவை அவரது கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்துள்ளாராம். அதோடு சப்னாவிடம் அவரது மகளும் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். எனவேதான் இது போன்ற ஒரு முடிவை எடுத்ததாக சப்னா தெரிவித்துள்ளார். மேலும் வீட்டை விட்டு வெளியேறும்போது பணம் மற்றும் நகைகளை எடுத்துச் செல்லவில்லை என்றும், மொபைல் போன், 200 ரூபாய் மட்டுமே எடுத்துச்சென்றதாக தெரிவித்துள்ளார். போலீஸார் எங்களை தேடுவதாக அறிந்து நாங்களே வந்து சரணடைந்தோம் என்றும் சப்னா தெரிவித்தார்.
ராகுலை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு,''என்ன நடந்தாலும் ராகுலுடன்தான் வாழ்வேன். ராகுலை திருமணம் செய்து கொள்வேன்'' என்று தெரிவித்தார்.
இது குறித்து ராகுல் கூறுகையில், ''சப்னா எனக்கு போன் செய்து அலிகர் பேருந்து நிலையத்தில் சந்திக்கவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். எனவேதான் அவருடன் சென்றேன். முதலில் லக்னோ சென்றோம். அங்கிருந்து முஜாபர்பூர் சென்றோம்'' என்றார்.
சப்னாவை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு, சிறிது அமைதிக்கு பிறகு, `ஆம் திருமணம் செய்வேன்’ என்று தெரிவித்தார். ஆனால் அவர் இரண்டு மனநிலையில் இருப்பது அவரது பேச்சில் தெரிய வந்ததாக தெரிவிக்கிறார்கள் போலீஸார்.
இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை
அதேசமயம் சப்னாவை இனி எங்களது விட்டிற்குள் அனுமதிக்கமாட்டோம் என்று சப்னாவின் கணவர் ஜிதேந்திர குமார் தெரிவித்தார். ``அவர் எடுத்துச்சென்ற நகை மற்றும் பணத்தை திரும்ப ஒப்படைக்கவேண்டும். சப்னா வீட்டை விட்டு ஓடிப்போனதால் எங்களது மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனது மகள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. எங்கள் மகள் வாழ்க்கையை தொடங்கும் முன்பு அதனை எனது மனைவியே சீரழித்துவிட்டார். சப்னா எடுத்துச்சென்ற பொருட்களை திரும்ப ஒப்படைக்கவில்லையெனில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சப்னா எப்போதும் ராகுலுடன் மொபைல் போனில் பேசிக்கொண்டே இருப்பார்” என்று அவர் தெரிவித்தார்.
சப்னாவின் மைத்துனர் தினேஷ் இது குறித்து கூறுகையில், ''ஜிதேந்திரா ஒருபோதும் சப்னாவை அடித்தது கிடையாது. நான் பல மாதங்கள் அவர்களது வீட்டில் தங்கி இருக்கிறேன். அப்போது ஒரு போதும் அது போன்ற ஒரு நிகழ்வை நான் பார்க்கவில்லை'' என்று தெரிவித்தார். கிராமத்தினர் ராகுலை சப்னாதான் கடத்திசென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இப்போது போலீஸார் இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.