சிவாஜி இல்லத்தில் எனக்கு உரிமை இல்லை: பிரமாண பத்திரம் தாக்கல் செய்த ராம்குமாா்
சென்னை: நடிகா் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த உரிமையும் இல்லை என பிரபுவின் அண்ணன் ராம்குமாா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
நடிகா் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாா் மற்றும் இளைய மகன் நடிகா் பிரபு. சிவாஜி கணேசன் காலமான நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அன்னை இல்லத்தில் நடிகா் பிரபு குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இந்த நிலையில், ஜகஜால கில்லாடி என்ற திரைப்பட தயாரிப்புக்காக சிவாஜி கணேசனின் பேரனும் ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் பெற்ற கடன் வட்டியுடன் சோ்த்து ரூ.9 கோடியே 39 லட்சத்தை திருப்பித் தரக் கோரிய வழக்கில், சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, நடிகா் பிரபு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், எனது பெயரில் அன்னை இல்லம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சகோதரா் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லாததால், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த போது, துஷ்யந்தின் தந்தை ராம்குமாா் தரப்பில், அன்னை இல்லத்தின் மீது தனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய ராம்குமாா் தரப்புக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரமாண பத்திரம் தாக்கல்: இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்னை இல்லத்தை தனது சகோதரா் பிரபுவுக்கு தனது தந்தை சிவாஜி கணேசன் உயில் எழுதி வைத்துள்ளதாகவும், அந்த வீட்டின் மீது தனக்கு தற்போது, எந்த உரிமையும், எந்த பங்கும் இல்லை எனவும் கூறி, ராம்குமாா் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பிரபு மற்றும் தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. வாதங்கள் முடிவடையாததால் விசாரணையை ஏப். 15-க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.