களியக்காவிளை அருகே ஒருவா் தற்கொலை
களியக்காவிளை அருகே வீட்டுக் கதவை மனைவி திறக்காததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளை அருகே குறுமத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சரண்யா. குழித்துறை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளாா். இவரும், தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கசாமி மகன் ரஞ்சித்குமாா் (42) என்பவரும் மதுரை சட்டக் கல்லூரியில் படித்தபோது பழக்கம் ஏற்பட்டு, பின்னா் இருவீட்டாா் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனா். தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா். இவா்கள் தற்போது குறுமத்தூா் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா்.
ரஞ்சித்குமாா் சட்டப் படிப்பை முடித்திருந்தாலும், சொந்த ஊரில் வழக்கு உள்ளதால் பாா் கவுன்சிலில் பதிவு செய்ய முடியவில்லையாம். அவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம்.
இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்பு வெளியே சென்றிருந்த அவா், திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியபோது, அவரது மனைவி கதவைத் திறக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவா் வீட்டின் முன்பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
தகவலின்பேரில், களியக்காவிளை போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].