``பிரபல யூடியூபருக்கு இந்த நிலைமைனா, சட்ட ஒழுங்கு மிக கேவலமாக..'' - திமுகவை சாடிய எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
"யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் பட்டப் பகலில் அத்துமீறி நுழைந்துத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசினுடையக் கவனத்திற்குக் கொண்டுசெல்ல எங்கள் இயக்கத்தினுடைய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொடுத்தார். ஆனால் எடுத்துக்கொள்ள மறுத்து விட்டனர்.

மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அதில் தமிழ்நாடு ஒரு மாநிலம். தமிழ்நாட்டில் இருக்கின்ற காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட காவல்துறை. ஆனால் இன்று கைகட்டி மௌனம் சாதித்து ஏவல் துறையாகச் செயல்படுவதுதான் மிக கேவலமாக இருக்கிறது.
எல்லா மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டில் நடக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனைத் தொடர்பானத் தகவல் செய்தியாகப் போகிறது. ஒரு பிரபலமான யூடியூபருக்கு இப்படிப்பட்ட நிலைமை என்றால் தமிழகத்தில் எங்கு சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது.
முதல்வர் சொல்கிறார் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது. வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் இதைப் பெரிதுப்படுத்துகிறார்கள் என்கிறார். இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்கிறது.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு போடாமல் அன்றைய தினமே அவர்கள் ஜாமீனில் வருகிறார்கள். ஜனநாயக நாட்டில் ஜனநாயகப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் பாதுகாப்பு வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சி குற்றத்திற்கு துணை போகக்கூடாது. தமிழக மக்கள் எப்படி ஜனநாயக இல்லாத நாட்டில் வாழ முடியும்.

எவ்வளவுக் கொடுமையான செயல். மலத்தைக் கொண்டு சென்று அவர்களின் வீட்டில் கொட்டினால் ஏற்றுக் கொள்வார்களா?
நாட்டு மக்களைப் பற்றிச் சிந்தித்தால் தானே நாட்டு மக்களின் பிரச்னைகள் என்னவென்று தெரியும். நாங்கள் இவர், அவர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்கவில்லை. எந்த ஒரு மனிதருக்கும் இதுபோன்று நடக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு'' என்று தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், " மக்களை ஏமாற்றவே நீட் தேர்வுத் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை ஸ்டாலின் கூட்டுகிறார். தேர்தல் நெருங்குவதால்தான் இதுபோன்ற நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். நாங்களும்தான் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானத்தைக் கொண்டு வந்தோம். அப்போது அவர்கள் கேலி செய்தார்கள்.

நிறையப் பேர் இந்த நீட் தேர்வால் உயிரிழந்திருக்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்துவிடுவோம் என்று இவர்கள் கூறியதை நம்பித்தான் மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பொய் சொல்லி 4 ஆண்டுக் காலத்தை ஓட்டிவிட்டார்கள்" என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
