மியான்மர் நிலநடுக்கம்: 35 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய பாகிஸ்தான்!
மியான்மர் நாட்டில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சுமார் 35 டன் அளவிலான நிவாரணப் பொருள்களை பாகிஸ்தான் அரசு அனுப்பியுள்ளது.
மியான்மரில் கடந்த மார்ச் 28 அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் 3,900 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடுமையான பொருள் சேதங்களை சந்தித்துள்ள அந்நாட்டுக்கு சர்வதேச நாடுகளும் உதவிக் கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், மியான்மர் ராணுவ அரசின் தலைவர் ஜென்ரல் மின் அவுங் ஹலைங்குடன் உரையாடிய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், பலியான மக்களுக்காக தனது இரங்கலை தெரிவித்தார். மேலும், மியான்மர் நாட்டுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய பாகிஸ்தான் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் மொத்தம் சுமார் 70 டன் அளவிலான நிவாரணப் பொருள்கள் மியான்மருக்கு அனுப்பப்படவுள்ள நிலையில் அதன் முதல் பகுதியாக கூடாரங்கள், தயாரான உணவுகள், தார்பாய்கள், போர்வைகள், மருந்துகள் மற்றும் குடிநீர் தொகுதிகள் அடங்கிய 35 டன் அளவிலான பொருள்கள் இன்று (ஏப்.1) அனுப்பப்பட்டுள்ளது.
மியான்மரின் யாங்கோன் நகருக்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருள்களை அனுப்பி வைக்கும் நிகழ்வில் பாகிஸ்தான் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தாரிக் ஃபசல் சௌத்ரி கலந்து கொண்டார்.
மேலும், இந்த உதவிகளுக்கு மியான்மரின் தூதர் பாகிஸ்தான் அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்ததுடன் நிவாரணப் பணிகளுக்காக பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளைப் பாரட்டினார்.
முன்னதாக, இந்தியா சார்பில் மியான்மர் நாட்டின் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சுமார் 100 டன் அளவிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:அமெரிக்காவின் தொடர் தாக்குதலுக்கு இரையாகும் யேமன் நகரங்கள்!