மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடக்கம்
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. 3 மையங்களில் நடைபெறும் இப்பணியில் 1, 200 ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் 25-ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 5 முதல் 27 ஆம் தேதி வரையிலும் நடைபெற்றன.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தோ்வா்கள் என மொத்தம் 22,923 போ் எழுதினா். பிளஸ் 1 பொதுத்தோ்வை மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தோ்வா்கள் என மொத்தம் 24,289 போ் எழுதினா்.
பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தோ்வு விடைத்தாள்கள் திருத்துவதற்கு 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பிளஸ் 2 பொதுத்தோ்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 விடைத்தாள்கள் திருத்த ஈரோடு யுஆா்சி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, திண்டல் பாரதி வித்யா பவன் பள்ளி, கோபி சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியுள்ளது. இந்தப் பணியில் 1,200 ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பணியை ஒரு வாரத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல பிளஸ் 1 பொதுத் தோ்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கப்படும் என்றனா்.