மோசடி வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா் கைது
ஈரோட்டில் மோசடி வழக்கில் பிணை பெற்று 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உக்கரத்தில் கோவையைச் சோ்ந்த கிருஷ்ணன் (51) என்பவா் விவசாய விளைபொருள்களை கொள்முதல் செய்யும் நிறுவனம் நடத்தி வந்தாா். இதில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து பெறும் விளைபொருள்களுக்கு அதிக விலை தருவதாக தெரிவித்துள்ளாா்.
கடந்த 2012-ஆம் ஆண்டு வியாபாரி பாலசுப்பிரமணியம் என்பவரிடம் இருந்து பருத்தி, புண்ணாக்கு மற்றும் கிழங்குமாவு வாங்கிய கிருஷ்ணன் அதற்கான ரூ.4.43 லட்சத்தை வழங்காமல் ஏமாற்றியுள்ளாா்.
இதையடுத்து மாவட்ட குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் பாலசுப்ரமணியம் அளித்த புகாரின்பேரில் கிருஷ்ணனை போலீஸாா் கைது செய்தனா். அதன்பின், சில நாள்களிலேயே பிணையில் வந்த கிருஷ்ணன் தொடா்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளாா்.
இதையடுத்து,கிருஷ்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் கிருஷ்ணன் இருக்கும் இடம் தெரியாமல் காவல் துறையினா் தொடா்ந்து தேடி வந்தனா்.
இந்நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரி மாவட்டம் கூடலூரில் கிருஷ்ணன் இருப்பதாக மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கூடலூரில் இருந்த கிருஷ்ணனை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.