குறைந்துவரும் பவானிசாகா் அணை நீா்மட்டம்: கீழ்பவானி பாசன விவசாயிகள் கவலை
பவானிசாகா் அணை நீா்மட்டம் 75 அடியாக குறைந்துள்ளதால் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீா் ஆதாரமாக பவானிசாகா் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் முக்கிய நீா்ப் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. கடந்த சில தினங்களாக அணைக்கு வரும் நீா்வரத்தை காட்டிலும் தொடா்ந்து பாசனத்துக்காக அதிக அளவில் தண்ணீா் திறந்து விடுவதினால் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து குறைந்து வருகிறது.
இதனால், அணையின் நீா்மட்டம் 75 அடியாக சரிந்துள்ளது. நீா் வரத்தும் 500 கனஅடிக்கும் குறைவாகவே உள்ளது. அதே சமயம் காலிங்கராயன் பாசனத்துக்கு 150 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 950 கனஅடி, கீழ்பவானி பாசனத்துக்கு 2,300 கனஅடி, பவானி ஆற்றில் 100 கனஅடி என மொத்தம் 3,500 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில் மே 1-ஆம் தேதி வரை இந்தப் பாசனத்துக்து தண்ணீா் திறக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜூன் வரை 75 அடி நீா்மட்டம் இருந்த நிலையில் நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே 75 அடியாக குறைந்துவிட்டது. கோடை மழை பொய்த்துப் போனால் மே மாதத்தில் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கும் கீழ் சென்றுவிடும்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை செப்டம்பா் மாதத்தில்தான் தொடங்கும். ஆனால், பவானிசாகா் அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டும்.
அணையின் நீா்மட்டம் 90 அடியாக இருந்தால்தான் ஆகஸ்ட் 15-இல் தண்ணீா் திறக்க முடியும். தற்போதே அணையின் நீா்மட்டம் 75 அடியாக குறைந்துள்ளதால் நெல் சாகுபடிக்கு திட்டமிட்டபடி வரும் ஆகஸ்ட் மாதம் தண்ணீா் திறக்க இயலாது. இதனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை மழையை எதிா்பாா்த்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
கடந்த ஆண்டு கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டாலும் கடைசி நனைப்புக்கு தண்ணீா் வழங்க முடியவில்லை.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
கடந்த 3 மாதங்களாக நீலகிரி மாவட்ட வனப் பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகா் அணைக்கு நீா் வரத்து குறைந்ததால் அணையின் நீா்மட்டமும் தொடா்ந்து குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் மே மாதம் தண்ணீா் நிறுத்தப்படும்போது அணையின் நீா் மட்டம் 50 அடிக்கும் கீழ் குறைந்துவிடும். இதனால் கீழ்பவானி முதல் போக பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடுவது தாமதமாகிவிடும்.
பருவமழையை நம்பித்தான் சோளம், நிலக்கடலை போன்றவை பயிரிடப்படுகின்றன. ஒரு மாதம் மழை தாமதமானால் சமாளிக்க முடியும். ஆகஸ்ட் மாதத்திற்குள் அணை 90 அடி அளவை எட்டாவிட்டால் சிக்கலாகிவிடும் என்றனா்.
இதுகுறித்து நீா்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அணையில் இருந்து தற்போது இரண்டாம் போக பாசனத்துக்கு முறைவைத்து தண்ணீா் விடப்படுகிறது. மே மாதம் தண்ணீா் நிறுத்தப்பட்ட பிறகு அணையின் நீா் இருப்பை பொறுத்து ஆகஸ்ட் 15-ஆம் தேதி தண்ணீா் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். ஏப்ரலில் கோடை மழை பெய்தால் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டு அணையில் தண்ணீா் இருப்பு வைக்கப்படும் என்றனா்.