நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி விரைவில் வேலை நிறுத்தப் போராட்டம்: 100 நாள் திட்ட தொழிலாளா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம்
நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி விரைவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பவானிசாகா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் கூட்டம் சத்தியமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் தலைவா் பி.எல்.சுந்தரம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் மகேந்திரன், மாவட்டச் செயலாளா் சி.கே.முருகன், ஒன்றியச் செயலாளா்கள் ரவிசந்திரன், லட்சுமி, ஜீவா சிவகாமி, காளசாமி, சிவண்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மத்திய அரசு தமிழகத்துக்கு விடுவிக்கவேண்டிய ரூ.4,034 ஆயிரம் கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
பவானிசாகா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி உள்ளிட்ட 4 வட்டாரங்களில் 40 ஊராட்சிகளில் 100 நாள் பணி மேற்கொண்ட 40 ஆயிரம் தொழிலாளா்களுக்கு 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படால் உள்ளது. இதனால், 100 நாள் திட்டப் பணியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி விரைவில் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.