ஏப். 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை: சென்னை மாநகராட்சி
முட்டை கேட்ட மாணவனை துடைப்பத்தால் தாக்கிய பெண்கள் - திருவண்ணாமலை அரசுப் பள்ளியில் அதிர்ச்சி!
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகிலுள்ள செங்குணம் கொள்ளைமேடு பகுதியில் செயல்பட்டுவரும் அரசு தொடக்கப் பள்ளியில், மாணவ - மாணவிகளுக்கு சத்துணவு முட்டை வழங்காமல் சத்துணவு தயாரிக்கும் பெண் பணியாளர்கள் வெளியில் விற்பனை செய்துவிடுவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. இந்தச் சூழலில், அந்த அரசுப் பள்ளியில் சத்துணவு வழங்கியபோது முட்டை கேட்ட ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு `இல்லை’ எனச் சொல்லியிருக்கின்றனர். ஆனால், சமையல் கூடத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த முட்டைகளை அந்த மாணவன் கண்டுபிடித்து கேள்வியெழுப்பியிருக்கிறான்.
இதனால் கோபமடைந்த சத்துணவு பெண் பணியாளர்கள் இருவரும் வகுப்பறைக்குள் புகுந்து மாணவனை துடைப்பத்தால் தாக்கிய அதிர்ச்சி காணொளி ஒன்று வெளியாகி, பெற்றோர்களை பதைபதைக்க செய்திருக்கிறது. வகுப்பறைக்குள் ஆசிரியை மற்றும் சக மாணவர்கள் இருக்கும்போதே... உள்ளே புகுந்து அந்த குறிப்பிட்ட மாணவனை பிடித்து துடைப்பத்தால் தாக்குகின்றனர் இரண்டு பெண்கள்.

`டீச்சர், டீச்சர்..’ என்று அந்த மாணவன் கத்திக்கொண்டே வகுப்பறைக்குள் சுற்றிச் சுற்றி ஓடுகிறான். ஆசிரியை தடுக்க முயலாமல் வேடிக்கை பார்த்தபடி நின்றுகொண்டிருக்கிறார். பேரப்பிள்ளை வயதான அந்த மாணவனை `நாய்ங்க... நாய்ங்க’ என்று இரண்டு பெண்களில் ஒருவர் திட்டித் தீர்க்கிறார். இந்தக் காட்சிகளை வகுப்பறையில் இருந்த மாணவிகள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. மாணவிகளின் கைகளில் எப்படி செல்போன் வந்தது என்பதும் கேள்வியாக எழுந்திருக்கிறது. இதற்கிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக, மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சமையலர் லட்சுமி மற்றும் சமையல் உதவியாளர் முனியம்மாள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.