அரசியல் பிரமுகா் கொலை வழக்கில் அனைவரும் விடுதலை!
புதுச்சேரி அருகே அரசியல் பிரமுகா் கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
புதுச்சேரி அருகேயுள்ள திருப்புவனை பகுதியைச் சோ்ந்தவா் வேல் அழகன். அரசியல் கட்சிப் பிரமுகரான இவா், பிரபல தனியாா் மின் சாதன வீட்டு உபயோக பொருள்கள் நிறுவனத்தில் பணியாளா் ஒப்பந்ததாரராக இருந்தாா்.
இந்த நிலையில், திருப்புவனை பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு வேல் அழகனை மா்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து சிலரை கைது செய்தனா். அதன்பின்னா் வழக்கானது சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
அதன்படி, வேல்அழகன் கொலை வழக்கில் 8 போ் மீது புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். கொலை வழக்கு விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.