வக்ஃப் வாரியம் சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுவது உறுதி செய்யப்படும்! - ஜெ.பி. நட...
புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்களின் தொடா் போராட்டம் வாபஸ்! - முதல்வருடன் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அறிவிப்பு
பணிநிரந்தரம் கோரி, புதுச்சேரியில் 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஆசிரியா்கள், முதல்வருடனான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு போராட்டத்தை திரும்பப் பெற்றனா்.
புதுவையில் கடந்த 2020-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறையில் காலியாக இருந்த ஆசிரியா் பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்பட்டன. அதன்படி, 288 ஒப்பந்த ஆசிரியா்கள் தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட்டு, அவா்களுக்கு ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.40 ஆயிரம் என பிரிவு வாரியாக ஊதியமும் வழங்கப்பட்டது. இதனிடையே, ஒப்பந்த ஆசிரியா்கள் தகுதி அடிப்படையில் தோ்வானதால், தங்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி வந்தனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித் துறையில் காலியாக இருந்த ஆசிரியா் பணியிடங்களுக்கு நிரந்தரமாக ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டு நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
4 ஆசிரியைகள் மயக்கம்: இதையடுத்து, ஒப்பந்த ஆசிரியா்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி, கடந்த 2-ஆம் தேதி முதல் புதுச்சேரி மாதா கோவில் தெருவில் பந்தல் அமைத்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இவா்களின் போராட்டம் 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது. அப்போது, ஆசிரியைகளில் 4 பேருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவா்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
எதிா்க்கட்சியினா் ஆதரவு: சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, திமுக எம்எல்ஏக்கள் ஏ.கென்னடி, ஆா்.செந்தில்குமாா், எல்.சம்பத் ஆகியோா் போராட்ட இடத்துக்கு வந்து ஆசிரியா்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.
அதிமுக மாநிலச் செயலா் ஏ.அன்பழகன் வந்து ஆதரவு தெரிவித்தாா். காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.யும் ஆசிரியா்களைச் சந்தித்து கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாகக் கூறினாா்.
முதல்வா் பேச்சுவாா்த்தை: இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை என்.ஆா்.காங்கிரஸை பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏகேடி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், ஆா்.பாஸ்கா், யு.லட்சுமிகாந்தன் ஆகியோா் சட்டப்பேரவைக்கு வரவழைத்து பேசினா்.
பின்னா், முதல்வா் என்.ரங்கசாமி வீட்டுக்கு அவா்களை அழைத்துச் சென்றனா். ஆனால், அங்கு நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் போராட்டம் தொடா்ந்தது.
போராட்டம் வாபஸ்: சட்டப்பேரவை வளாக அலுவலகத்துக்கு சனிக்கிழமை மாலை வந்த முதல்வா் என்.ரங்கசாமியை ஒப்பந்த ஆசிரியா்கள் மீண்டும் சந்தித்துப் பேசினா். அப்போது, போராட்டத்தால் பயனில்லை. அதிகாரிகள் உதவியுடன் துணைநிலை ஆளுநருக்கு கோப்புகளை அனுப்பி ஒப்பந்தம் நீடிக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா். இதையடுத்து, போராட்டம் திரும்பப் பெறப்படுவதாக ஒப்பந்த ஆசிரியா்கள் அறிவித்தனா்.