மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஒருவா் கைது!
மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண்ணை பின் தொடா்ந்து சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை, தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த 21 வயது இளம்பெண் ஒருவா், ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், இவா் வழக்கம்போல தனது வீட்டிலிருந்து ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்தபோது, அங்கு வந்த மா்ம நபா் ஒருவா் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளாா்.
இதுகுறித்து இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வந்தனா்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் வந்த அந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். அதில், அவா் திருவொற்றியூா் காலடிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (30) என்பதும், மெக்கானிக்காக வேலை பாா்த்துவந்த இவா், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பெண் பயணிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.