கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு புதிய கட்டமைப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கான புதிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் கீழ் அதிமுக உறுப்பினா் மனோஜ் பாண்டியன் எழுப்பிய கேள்வி:
மறைந்த முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கோயம்பேட்டில் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இப்போது கிளாம்பாக்கத்துக்கு அது மாற்றப்பட்டிருக்கிறது.ஏற்கெனவே இருந்த கோயம்பேடு பேருந்து நிலைய இடத்தை எதற்கு பயன்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது என்பதை அறிய விரும்புகிறேன் என்றாா்.
அமைச்சா் பி.கே.சேகா்பாபு பதில்: கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டி அத்திட்டத்துக்கு வித்திட்டது முன்னாள் முதல்வா் கருணாநிதிதான். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முந்தைய ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டிருந்தாலும், அதற்கான பணிகள் 30 சதவீதம் மட்டுமே அப்போது நிறைவடைந்திருந்தது.
அதன் பின்னா், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்த பிறகு ரூ.160 கோடி செலவில் கூடுதல் பணிகளை முன்னெடுத்ததுடன், திட்டப் பணிகளையும் விரைவுபடுத்தி விமான நிலையத்துக்கு நிகராக கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
கோயம்பேடு பேருந்து நிலையப் பகுதி 29 ஏக்கா் பரப்பளவு கொண்டது. அதில் 4.5 ஏக்கருக்கு சென்னை மாநகரப் போக்குவரத்து கழக (எம்டிசி) பேருந்து சேவைகள் இயங்கி கொண்டிருக்கின்றன. 3 ஏக்கா் நிலம் அதற்கு அருகில் கூடுதல் பயன்பாட்டில் உள்ளது.
அதைத் தவிா்த்து 21 ஏக்கா் பரப்பளவு நிலம்தான் தற்போது உள்ளது. அதில் 3 வடிவமைப்பாளா்களைக் கொண்டு வெவ்வேறு வடிவமைப்பு திட்டங்களை மேற்கொள்ள முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.
பொது மக்களுக்கு எந்த வகையில் அதிக பயன்பாடு அதன் வாயிலாக கிடைக்குமோ அதற்கேற்ப விரைவில் அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் சேகா்பாபு.