`போர்க்களத்தின் தளபதி சீமான்' - `என் அன்பு இளவல் அண்ணாமலை' - ஒரே மேடையில் புகழ்ந்துகொண்ட தலைவர்கள்!
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள SRM பல்கலைக்கழகத்தில் SRM தமிழ் பேராயம் சார்பில் ‘சொல் தமிழா சொல்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய அண்ணாமலை, ``அண்ணன் சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்பதைவிட போர்க்களத்தில் இருக்கக்கூடிய தளபதியாக இருக்கிறார்.

அவர் எடுத்துக்கொண்ட கொள்கையில் நிலையாக நிற்கிறார். எனக்கும் சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். அவர் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். தேசியக் கட்சிகள் தேசிய பிரச்னையை முதன்மையாகவும் மாநிலப் பிரச்னைகளை முக்கியமானதாகவும் பார்க்க வேண்டும். அதேபோலதான், மாநிலக் கட்சிகளும் மாநிலப் பிரச்னைகளை முதன்மையாகவும், தேசியப் பிரச்னைகளை முக்கியமானதாகவும் பார்க்கவேண்டும்.
அப்போதுதான் தேசம் சிறந்த ஆளுமைகளால் நல்லதாக மாறும். ஆனால் இப்போது தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் அதீதத்துக்கு செல்லும்போது நடுவில் மக்கள்தான் மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள். நானும் சீமானும் ஒரே முறை மேடையில் இருப்பதால் சர்ச்சை உருவாகும். மேடைகளில் பேசுவதை விட சமூக வலைத்தளங்களில் ஒரு கருத்தை பதிவிட்டு ஓடி ஒளிந்து கொள்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பேசுவதை விட பொதுவெளியில் வெளிப்படையாக பேச வேண்டும்." என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய சீமான், ``இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பு செய்திருக்கிற பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர், பாஜக என்றக் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது, வளர்கிறது என்று தன்னுடைய செயல் ஆற்றலால் நிகழ்த்திக் காண்பித்த என் அன்பு இளவல் அண்ணாமலை" எனப் பேசியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
