தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்தின் கீழ் புதுமையான சுயசாா்பு தீ பாதுகாப்பு உடை
Travel Contest: "பாக்க சின்னதா இருக்கும்; ஆனா ஆளயே கொன்றும்" - பரம்பிக்குளம் சுற்றுலா அனுபவம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பரம்பிக்குளம், காட்டின் நடுவே தங்குமிடம், விலங்குகளை அவற்றின் இருப்பிடத்திற்கே சென்று அவை வளரும் சூழ்நிலையில் பார்க்கும் வாய்ப்புடைய, பசுமையான வனாந்தரம் சூழ்ந்த ரம்மியமான ஒரு சுற்றுலாத் தலம்.
கோயம்புத்தூர், பொள்ளாச்சி, ஆனைமலை, டாப்சிலிப் வழியே பயணம் செய்தால், பரம்பிக்குளம் சென்றடையலாம். இது கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் சித்தூர் தாலுக்காவில் அமைந்துள்ளது.
கேள்விப்பட்ட நாள் முதல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு. அடுத்த சுற்றுலா நிச்சயம் இங்கு தான் என இச்சை கொண்டேன். அதற்கு அச்சாரம் போடுவது போல் இருந்தது தோழியின் குறுஞ்செய்தி.

பிறகு என்ன, நண்பர்கள் குழு செயல்பட ஆரம்பித்தது. நல்லதொரு நாளும் நிச்சயம் ஆனது. சூலை 12 அன்று கிளம்புவது என்று முடிவானது.
10 இல் துவங்கி 8 ஆகி பின் 6 பேருடன் பயணம் என்பதும் முடிவானது. கோயம்புத்தூர் வரை ரயில் பயணம் செய்து, பின் அங்கிருந்து மகிழுந்து மூலம் பிரயாணம் தொடர முடிவு செய்தோம்.
பரம்பிக்குளம் வனத்தில், கேரளா வனத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்த தங்கும் விடுதியைத் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்தோம்.
சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்ல ரயில் பயணத்திற்கும் முன்பதிவு செய்து பயணத்தின் கடைசி வாரம் வரை காத்திருந்தோம்.
எங்கள் பயணச்சீட்டும் எங்களைப் போலவே காத்திருப்பு பட்டியலில் காத்திருந்தது. பயணச்சீட்டு நிச்சயம் ஆகும் என்ற நம்பிக்கை நிச்சயமாக எங்கள் மனதில் இல்லை. பயணத்திற்கு வேறு மார்க்கம் பார்க்க முடிவு செய்தோம்.
எங்கள் பயணம் சிறக்க இயக்கப்பட்டது போல் தென்பட்டது அந்த சிறப்பு இரயில். அதில் பயணச்சீட்டும் அதிகம் இருந்தது. எனவே அதில் முன்பதிவு செய்தோம்.
இதில் தனிச்சிறப்பு யாதெனில், திரும்பி வருவதற்கும் சிறப்பு இரயிலிருந்ததுதான்.
அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பயணத்திற்காகக் காத்திருந்தோம். பயணம் துவங்கும் நாள் வந்தது, எங்கள் 2 நாள் சுற்றுலா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து துவங்கியது.

மறுநாள் காலை கோயம்புத்தூர் இரயில் நிலையம், மணியோசையுடன் சேர்ந்த ஒரு இனிமையான குரல் எங்களை அன்புடன் வரவேற்றது. வெளியே வந்ததும், நாங்கள் முன்பதிவு செய்திருந்த மகிழுந்து எங்களுக்காகக் காத்திருந்தது.
மகிழுந்து கொண்டுவந்தவரிடம் சில விவரங்கள் கேட்டறிந்த பிறகு, ஓட்டுநர் உரிமம் மற்றும் முன்பணம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். கூகுளை எங்கள் வழித் துணைக்கு வைத்துக்கொண்டோம்.
அது எங்களுக்கு ஆனைமலை மலையடிவாரம் வரை மிகத்துல்லியமாக வழி காட்டியது. அதன் பிறகு அதன் உதவி எங்களுக்குத் தேவைப் படவில்லை.
ஏனெனில் மலைப்பாதை ஆரம்பம் ஆனால் பிறகு, அது ஒரு வழிப் பாதை. நாம் நினைத்தாலும், பாதை மாற இயலாது.

பச்சைப் பட்டாடை போர்த்திய பர்வதங்கள்:
ஆனைமலை சோதனைச் சாவடியில் எங்கள் விவரங்களைப் பதிவு செய்ய வாகனத்தை நிறுத்தினோம்.
செல்லும் வழி முழுவதும் காட்டு வழி, எனவே எங்கும் வாகனங்களை நிறுத்தவோ வாகனத்தை விட்டு இறங்கவோ கூடாது, குப்பைகளை வீசக்கூடாது, விலங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது போன்ற வழிமுறைகளைக் காவலர்கள் எடுத்துக் கூறினார்கள். அதன் பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது.
அப்பப்பா இயற்கையின் அழகே தனி தான், அதிலும் மனிதர்களால் மாசு படுத்தப்படாத இயற்கை, பேரழகு. ஆம், இந்த இடம் மக்களுக்கு அதிகம் பரிட்சியம் இல்லாத காரணத்தால், மனிதர்களின் வரவு மிகவும் குறைவு. எனவே இயற்கை அதன் கட்டுக் கலையாமல் இயற்கையாகவே இருந்தது.
சுற்றிலும் மலை, மலை முழுவதும் அடர்ந்த மரங்கள், இளவேனில் காலம் முடிந்து முதுவேனில் காலம் ஆரம்பமாகி இருந்தது. எனவே, மரங்களும் செடிகளும் புதுத் தளிர் விட்டு புத்துணர்ச்சியுடன் காணப் பெற்றன.
பார்க்கும் பக்கமெல்லாம் பச்சைப் பட்டாடை போர்த்திய பர்வதங்கள் மட்டுமே தெரிந்தன. வளைந்து நெளிந்த காட்டு வழிப் பாதை.
சிறு, சிறு கொண்டை ஊசி வளைவுகள் வழியாக டாப்சிலிப் சோதனைச் சாவடியை அடைவதற்குச் சற்று முன்பாக, சாலை ஓரத்தில், ஒரு கரிய பெரிய உருவம் கண்டு வியப்பில் ஆழ்ந்தோம். சிறிய தந்தங்களும், பெரிய காதுகளும் கொண்ட பெரிய யானை அது.

வளைந்து நெளிந்த காட்டு வழி பாதை. சிறு, சிறு கொண்டை ஊசி வளைவுகள் வழியாக டாப்சிலிப் சோதனைச் சாவடியை அடைவதற்கு சற்று முன்பாக, சாலை ஓரத்தில், ஒரு கரிய பெரிய உருவம் கண்டு வியப்பில் ஆழ்ந்தோம். சிறிய தந்தங்களும், பெரிய காதுகளும் கொண்ட பெரிய யானை அது.
திகில் ஏற்படுத்திய யானை:
சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த அந்த யானை சற்றே எங்களுக்குத் திகில் ஏற்படுத்தியது. பிறகு காலில் பிணைத்திருந்த சங்கிலியைக் கண்டதும் சற்று நிம்மதி அடைந்தோம்.
டாப்சிலிப் வரும் சுற்றுலாப் பயணிகள் யானைச் சவாரி செய்வதற்காக வளர்க்கப்படும் யானை எனத் தெரிந்தது.
பிறகு சோதனைச் சாவடியில் விவரங்களைப் பதிவு செய்யச் சென்ற அந்த இடைவெளியில், நண்பர்கள் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார்கள்.

இயற்கையாய் வளர்ந்திருந்த மூங்கில் புதரின் அருகில், செயற்கையாய் வைக்கப்பட்டிருந்த மூங்கில் இருக்கையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
மேலும் பயணம் தொடர்ந்தது. வழியெங்கும் காடு ஆயினும், பாதை மிகவும் நன்றாக அமைந்திருந்தது.
செல்லும் வழியெங்கும் மரகதப் பச்சையும், வெளிர்ப் பச்சையுமாய் கலந்திருந்த செடி கொடிகளை இரசித்துச் சென்றோம்.
கடைசியாக பரம்பிக்குளம் சோதனைச்சாவடியை அடைந்தோம். நுழைவு வாயிலின் முன்பே வாகனத்தை நிறுத்தச் சொன்னார்கள் காவலர்கள். வாகனத்தை நிறுத்தி இறங்கி சோதனைச்சாவடிக்கு நடந்தோம்.
நுழைவுவாயில் மிகவும் அருமையாக வடிவமைக்கப் பட்டிருந்தது. பாதியாக வெட்டிய பெரிய மரம் போல் இருந்தன அதன் சுவர்கள். சுவரின் இருபக்கங்களிலும் சிறுத்தையின் சிலை வைக்கப்பட்டிருந்தது.
இரு சுவரையும் இணைக்கும் கல்லின் மேல், கம்பீரமான ஒரு புலியின் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதன் ஊடே நடந்து சென்றால், ஒரு சிறிய பாலம். பாலத்தின் அடியில் ஒரு சிற்றாறு. தண்ணீர் அதிகம் இல்லை, எனினும் தண்ணீர் மிகத் தெளிவாக இருந்தது.
பாலத்தைக் கடந்து சென்று, சோதனைச் சாவடி அலுவலகம் அடைந்தோம். அங்கு, நாங்கள் முன்பதிவு செய்த விவரங்களைச் சரிபார்த்து பின்னர் மேலும் பயணம் செய்ய அனுமதி அளித்தனர்.
இதற்கிடையில், அங்கு இருந்த சிற்றோடையில் இறங்கி சில புகைப்படங்களை எங்கள் புகைப்படக் கருவியிலும், கைப்பேசியிலும் பதிவு செய்தோம்.
கண்ணாடி போல் தெளிந்திருந்த நீரில், மீன்களுடன் சேர்ந்து நாங்களும் விளையாடினோம். மறுபடியும் பயணம் தொடர்ந்தது.

வாகனம் நுழைவு வாயிலைக் கடந்தபோது, கிளைத்த கொம்புகளுடனும், உடல் முழுக்க வெண்ணிற புள்ளிகளுடனும் துள்ளிக் குதித்து சாலையைக் கடந்தன செந்நிற மான் கூட்டங்கள். அதனின் துள்ளல் எங்கள் மனதிலும் பிரதிபலித்தது.
பயணத்தின் உற்சாகமும் விலங்குகளைக் காணும் ஆவலும் மேலும் கூடியது. இருபுறங்களிலும் விலங்குகளைத் தேடி எங்கள் அனைவரின் கண்களும் சுற்றிச் சுழன்றன.
எங்கள் கண்கள் ஏமாற்றம் கொள்ளவில்லை. ஆங்காங்கு சிறு, சிறு மான் கூட்டங்கள் கண்களுக்கு விருந்தளித்தன. அந்த விருந்தினை எங்கள் புகைப்படக் கருவிகளுக்கும் பரிமாற்றம் செய்தோம்.
பட்டாம்பூச்சிக் கூட்டமும் தோகை விரித்த மயில்களும்!
வாகனத்தை மெல்ல இயக்கி, இயற்கையின் படைப்புக்களை இரசித்துச் சென்றோம். மழை பெய்து சாலையில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது.
சில இடங்களில் சாலை சேதமுற்று மண் தரையாக இருந்தது. எனவே கவனமாகவும், மெதுவாகவும் வாகனம் இயக்கப்பட்டது.

சாலையிலிருந்த ஈரப்பதத்தினால் ஈர்க்கப்பட்டுக் கூடியிருந்த பட்டாம்பூச்சி கூட்டம், சட்டென்று சிதறி சிறகுகளை விரித்துப் பறந்து வர்ணஜாலத்தை நிகழ்த்தியது.
கருநிற பச்சையால் சூழப்பட்டிருந்த அந்த வனத்தில், வெளிர்ப்பச்சை நிறத்தில், சத்தமேதும் செய்யாமல் சிறகடித்துப் பறந்த பட்டாம்பூச்சிகள், எங்கள் மனதில் பரவசமூட்டியது.
மயில்கள் எங்கள் வரவுக்காகவே காத்திருந்தது போல, பச்சையும் ஒளிபொருந்திய நீலமும் கலந்த அதன் மெல்லிய கழுத்தினை உயர்த்திப் பார்த்தன.
அந்த அழகிய காட்சிகளில் உடனிருந்த அனைவரும் மெய் மறந்தனர். பேச்சாற்றல் இழந்தவர்கள் போல அனைவரும் மௌனம் கொண்டிருந்தனர்.
எத்தனை தூரம் கடந்து வந்தோம் என்பதையும் மறந்தோம். இந்த மாயையிலிருந்து எங்களை விடுவிக்க வந்தார் வனக்காவலர் ஒருவர். அவர் கையசைத்து எங்கள் வாகனத்தை நிறுத்தினர்.
நாங்கள் பரம்பிக்குளம் தகவல் மையத்தை அடைந்திருந்தோம். அங்கும் எங்கள் முன்பதிவு விவரங்கள் மற்றும், நுழைவு வாயிலில் கொடுக்கப்பட்ட அனுமதிச் சீட்டு அனைத்தையும் சரி பார்த்த பின்னர், எங்கள் பாதுகாப்பிற்கும் வழித் துணைக்கும் ஒரு வனக் காவலர் நியமிக்கப்பட்டார்.
எங்கள் குழுவில் பெண்கள் இருந்ததால், பெண் காவலரை எங்கள் துணைக்கு அனுப்பினர்.

காவலர் எங்களுடன் சேர்ந்துகொண்ட பிறகு பயணம் தொடர்ந்தது. பரம்பிக்குளம் காட்டின் பூர்வ குடியைச் சேர்ந்தவர் அவர். காட்டின் ஒவ்வொரு அசைவையும் புரிந்துகொள்ளும் அளவிற்கு அனுபவம் பெற்றிருந்ததாகத் தெரிந்தது அவரின் பேச்சு.
எங்களுடன் சேர்ந்த சில நிமிடங்களில் நன்றாகப் பழகிவிட்டார். தன்னை அக்கா என்று அழைக்கவும் அன்பாக விண்ணப்பித்தார். அவர் எங்கள் பயண விவரங்களை விளக்கினார்.
முதலில் தாங்கும் விடுதிக்குச் சென்று, பயண சிரமங்களை முடித்து சற்று ஓய்வு எடுத்த பிறகு மத்திய உணவு தயாராகி விடும் என்றும், உணவு அருந்திய பிறகு 2 மணி அளவில் காட்டைச் சுற்றிப் பார்க்கச் செல்லலாம் என்றும் கூறினார்.
முதலில் "வேலி வியூ பாயிண்ட் (valley view point)" பார்த்துவிட்டு, பிறகு "பரம்பிக்குளம் அணை", அடுத்து "கன்னிமரா தேக்கு மரம்", கடைசியாக "பூர்வ குடிகளின் நடனம்" எனப் பயண விவரங்களைக் கூறினார்.
மறுபடியும் காட்டின் சிறப்புகளைக் கூற ஆரம்பித்தார். வலதுபுறம் இருந்த பெரிய ஏரியைச் சுட்டிக்காட்டி, அதுதான் அவர்களின் நீராதாரம் எனக் கூறிக்கொண்டிருக்கும்போதே, சட்டென்று எதையோ பார்த்ததுபோல் பேச்சை நிறுத்தினார். அந்த ஏறிக் கரையைச் சுட்டிக் காட்டி
"அது தெரிகிறதா, ஓடுகிறது பாருங்கள்" என்றார்.
எங்கள் அனைவரின் பார்வையும் ஒருங்கே அவர் காட்டிய திசையை நோக்கியது. முதலில் ஒன்றும் புலப்படவில்லை.
"ஹேய்..!!! ஆமா தெரியுது" என்றது முதல் குரல்.
பிறகு, "நல்ல பாருங்கள் அது மறஞ்சுட போகுது" என்றார் காவலர் அக்கா.
உற்றுக் கவனித்ததில், வாயின் இருபக்கமும் கொம்புகள், நன்கு கொழுத்த உடல் கொண்ட அது, காட்டுப் பன்றி எனத் தெரிந்தது. அனைவரும் அதனைப் பார்த்த பிறகு அக்கா மறுபடியும் பேசத் தொடங்கினார்.
"காட்டு பண்ணி பாக்க சின்னதா தான் இருக்கும், ஆனா ரொம்ப மோசமானது. தனியா போனா ஆளையே முட்டித் தள்ளி கொன்னுடும். கூட்டமா சேர்ந்தா, அவ்ளோதான்" எனக் கூறி நிறுத்தினர்.
-தொடரும்.

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - ‘சுற்றுலா”. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.