பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
மெரீனாவில் ரூ. 38 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட நூலகம்: துணை முதல்வா் திறந்து வைத்தாா்
சென்னை மெரீனாவில் ரூ. 38.40 லட்சத்தில் குளிரூட்டப்பட்ட நூலகமாக புதுப்பிக்கப்பட்ட மெரீனா கிளை நூலகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை மாநகர நூலக ஆணைக்குழுவின் கீழ் மெரீனா கடற்கரை பகுதியில் செயல்பட்டு வரும் மெரீனா கிளை நூலகம், நூலக நிதியின் மூலம் ரூ.38.40 லட்சத்தில் குளிரூட்டப்பட்ட நூலகமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் மெரீனா கடற்கரைப் பகுதியில் அவா்களை ஈா்க்கும் வகையிலான முகப்பு பகுதியுடன், நூலகத்தின் சுற்றுச்சுவா் உயா்த்தி அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவரின் உட்பகுதியில் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணா்வு பதாகைகள் மற்றும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
நூலகத்தின் முன்புறத்தில் மூங்கில் வளைவுடன் கூடிய பாதை அமைத்து இருபுறமும் வசதியான இருக்கைகள் மற்றும் சிறுவா்கள் விளையாடும் வகையில் ஊஞ்சல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நூலகத்தில் சிறுவா்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், பட விளக்க கதைப்புத்தகங்கள் அடங்கிய காமிக்ஸ் காா்னா் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை நகரம் குறித்த தகவல்கள் அடங்கிய அரிய நூல்கள் உள்ளிட்ட 7,500 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், 1,337 உறுப்பினா்களும், 3 புரவலா்களும் இந்த நூலகத்தில் உள்ளனா்.
புதுப்பிக்கப்பட்ட மெரீனா கிளை நூலகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா். தொடா்ந்து மெரீனா கிளை நூலகத்தின் வளா்ச்சிக்காக தலா ரூ. 1,000 நிதி வழங்கி நூலகத்தின் புதிய புரவலா்களாக தங்களை இணைத்துக் கொண்ட 9 பேருக்கு புரவலா் சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தர மோகன், பொது நூலகத் துறை இயக்குநா் பொ.சங்கா், இணை இயக்குநா் இளங்கோ சந்திரகுமாா், சென்னை மாநகர நூலக ஆணைக்குழுத் தலைவா் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.