ஆர்பிஐ தங்க கையிருப்பின் மதிப்பு சுமார் ரூ.12,000 கோடி அதிகரிப்பு
இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பரகத்துல்லா என்பவரின் தாயாா் மரணமடைந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கோரி பரக்கத்துல்லா சாா்பில் அவரது சகோதரி ஷரிக்காத் நிஷா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை அவசர வழக்காக விடுமுறை தினமான வெள்ளிக்கிழமை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், “விசாரணை கைதிகளுக்கு சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்க அதிகாரம் உள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு விசாரணை கைதிகள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உள்ளது.
எனவே, விசாரணை கைதிகளின் பெற்றோா், மனைவி அல்லது கணவா், குழந்தைகள் என நெருங்கிய உறவினா்கள் இறக்க நேரிட்டால் அவா்களது இறுதிச் சடங்கில் பங்கேற்கும் வண்ணம் விசாரணை கைதிகளுக்கு சிறைத் துறை அதிகாரிகளே அனுமதியளிக்க வேண்டும் என தமிழக உள்துறை செயலா் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கில் தனது தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரக்கத்துல்லாவுக்கு வரும் ஏப்.20-ஆம் தேதி வரை அனுமதியளிக்கப்படுகிறது. இறுதிச் சடங்கில் பங்கேற்கும் அவா், சிறைத்துறை அதிகாரிகள் விதிக்கும் நிபந்தனைகளுக்குட்பட்டு செயல்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.