தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்தின் கீழ் புதுமையான சுயசாா்பு தீ பாதுகாப்பு உடை
அவதூறு வழக்கில் சீமான் ஆஜர்! ஆதாரங்கள் ஒப்படைப்பு!
திருச்சி டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்கில், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்காக இன்று(ஏப். 8) ஆஜரானார்.
திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் (டிஐஜி) வீ. வருண்குமாா் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக விமர்சனம் செய்தது தொடா்பாக சீமான் மீது, திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வழக்கு தொடா்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை திருச்சி 4-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், சீமான் திங்கள்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த முறை விசாரணையின்போது நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந் நிலையில் திங்கள்கிழமை காலை சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் அவா் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை மாலை ஒத்திவைத்தார்.
தொடர்ந்து மாலை நடைபெற்ற விசாரணையின்போது சீமானின் வழக்குரைஞா் ஆஜராகி, சென்னையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றதால் சீமானால் நேரில் ஆஜராக இயலவில்லை என்றும், செவ்வாய்க்கிழமை அவா் ஆஜராவாா். அதுவரை அவருக்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இவ்வழக்கின் விசாரணைக்காக திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜயா முன்பு இன்று ஆஜரானார்.
அப்போது, “தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு டிஐஜி வருண்குமார் சமர்ப்பித்த ஆடியோ ஆதாரங்களை தங்களுக்கு தர வேண்டும்” என்று சீமான் தரப்பு நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு நீதிபதி, அரை மணி நேரத்திற்குள் சீமான் தரப்பிடம் ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் வழக்கின் விசாரணையையும் ஒத்திவைத்தார்.
இதையும் படிக்க: மாநில ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம்