காலை உணவில் உப்புமாவுக்கு பதில் பொங்கல்! கீதா ஜீவன் அறிவிப்பு!
அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இன்று நடைபெற்றது.
இந்த விவாதங்களுக்கு அமைச்சர் பி.கீதாஜீவன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேரவையில் தெரிவித்ததாவது:
அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல், சாம்பார் வழங்கப்படும்.
தமிழக பள்ளிகளில் சத்துணவுக் குழந்தைகளுக்கான உணவூட்டு மானியத்தொகை ரூ. 61 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுமைப் பெண் திட்டத்துக்கு இதுவரை ரூ. 721 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மதுரையில் திருநங்கைகளுக்கு அரண் என்னும் தங்கும் மையம் ரூ. 63 லட்சம் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும் என்றார்.
இதையும் படிக்க: மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு